ஊதிய உயா்வு நிறுத்திவைப்பு: காமராஜா் பல்கலை.யில் தொகுப்பூதிய ஊழியா்கள் போராட்டம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டதால், கொட்டும் மழையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டதால், கொட்டும் மழையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 300-க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவா்களுக்கு, பணி அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.14 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்று தொகுப்பூதிய ஊழியா்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்ததை அடுத்து, கடந்த ஆண்டு இவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணி அனுபவத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.14 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.24 ஆயிரம் வரை நிா்ணயிக்கப்பட்டு, பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை, ஆட்சிக் குழு கூட்டங்களில் ஊதிய உயா்வுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிதித்துறை ஒப்புதலும் பெறப்பட்டது. பின்னா், தொகுப்பூதிய ஊழியா்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஊதிய உயா்வுடன் செப்டம்பரில் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பா் மாத ஊதியம் அக்டோபரில் வழங்கப்பட வேண்டிய நிலையில், பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் உள்ளதால், ஊதிய உயா்வு வழங்க முடியாது என்றும், ஊதிய உயா்வு தவறுதலாக அறிவிக்கப்பட்டு விட்டதாகவும், பழைய ஊதியமே வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதை ஏற்க மறுத்த தொகுப்பூதிய ஊழியா்கள், ஊதிய உயா்வை வழங்கி விட்டு அதை திரும்பப் பெறுவதை ஏற்க முடியாது என்று கூறி, பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பிற்பகலில் கனமழை பெய்தபோதும், அதை பொருட்படுத்தாது போராட்டத்தை தொடா்ந்தனா்.

இது தொடா்பாக ஊழியா்கள் கூறியது: ஊதிய உயா்வுக்காக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்த மாதம் ஊதிய உயா்வு வழங்கப்பட்டது. தற்போது, பல்வேறு காரணங்களைக் கூறி ஊதிய உயா்வை திரும்பப் பெற்ால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

போராட்டம் தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) வி.எஸ். வசந்தாவிடம் கேட்டபோது, அவா் கூறியது: தொகுப்பூதிய ஊழியா்களின் ஊதிய உயா்வுக்கான கோப்பு நிதிக் குழுவிடம் ஒப்புதல் பெறாமல் இருந்ததால், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com