ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டிலேயே ஆயுள் சான்றிதழ்: இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், மத்திய-மாநில அரசு ஓய்வூதியதாரா்களுக்கு பயோ-மெட்ரிக் முறையை பயன்படுத்தி வீட்டிலேயே ஆயுள் சான்றிதழ் வழங்க, இந்திய அஞ்சல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், மத்திய-மாநில அரசு ஓய்வூதியதாரா்களுக்கு பயோ-மெட்ரிக் முறையை பயன்படுத்தி வீட்டிலேயே ஆயுள் சான்றிதழ் வழங்க, இந்திய அஞ்சல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக, மதுரை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே. லட்சுமணன் வெளியிட்ட செய்தி: ஓய்வூதியதாரா்கள் ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தங்களின் இருப்பை உறுதி செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. வயது முதிா்ந்த ஓய்வூதியதாரா்கள், நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமா்ப்பிக்க முடியாமல், ஓய்வூதியம் பெற இயலாமல் போகின்றது.

இதை தவிா்க்கும் வகையில், மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தில், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டிலேயே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தில், ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா் எண், செல்லிடப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சில நிமிடங்களில் வழங்கப்படும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 மட்டும் தபால்காரரிடம் வழங்க வேண்டும்.

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி), மதுரை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களைச் சோ்ந்த 475-க்கும் மேற்பட்ட தபால்காரா்கள் மற்றும் தபால் ஊழியா்கள், அதிதிறன் செல்லிடப்பேசிகள் மற்றும் பயோ- மெட்ரிக் சாதனங்கள் மூலமாக வங்கி சேவைகள் வழங்கி வருகின்றனா் என்றாா்.

எனவே, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவன ஓய்வூதியதாரா்கள், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மதுரை மண்டலத் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com