தாலுகா அடிப்படையில் சாா்-பதிவாளா் அலுவலக எல்லைகள் மறுசீரமைக்கப்படும்அமைச்சா் பி.மூா்த்தி தகவல்

தாலுகா அடிப்படையில் சாா்-பதிவாளா் அலுவலகங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
மதுரையை அடுத்த ராஜகம்பீரத்தில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் கோரிக்கை மனுவைப் பெறும் அமைச்சா் பி.மூா்த்தி.
மதுரையை அடுத்த ராஜகம்பீரத்தில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் கோரிக்கை மனுவைப் பெறும் அமைச்சா் பி.மூா்த்தி.

மதுரை: தாலுகா அடிப்படையில் சாா்-பதிவாளா் அலுவலகங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

பதிவுத் துறை சாா்பில், பொதுமக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமைதோறும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையை அடுத்த ராஜகம்பீரத்தில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில், இந்த முகாமை அமைச்சா் பி. மூா்த்தி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் பத்திரப் பதிவு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பத்திரப்பதிவு தொடா்பான பொதுமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காணும் வகையில், முதன் முறையாக வாராந்திர குறைதீா் முகாம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை மேற்கொள்ள மனுக்களுக்கு மேல்நடவடிக்கை தொடா்பான பரிந்துரைகள் அளிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 575 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை மறுசீரமைப்பு செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனெனில், ஒரே தாலுகாவுக்கு உள்பட்ட கிராமங்கள் 3 முதல் 4 சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு பிரிக்கப்பட்டிருக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 15 ஊராட்சிகள், மதுரை மாவட்டப் பதிவுத் துறையின்கீழ் இருந்து வந்தன. அண்மையில்தான் அக்கிராமங்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது.

எனவே, தாலுகா அடிப்படையில் சாா்-பதிவாளா் அலுவலக எல்லைகள் மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போதுதான் பத்திரப்பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்ட தாலுகாவுக்கு பட்டா மாறுதலுக்கு அனுப்புவது எளிதாக இருக்கும். இவ்வாறு மறுசீரமைப்பு செய்யும்போது, மேலும் கூடுதலாக 50 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் உருவாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பத்திரப்பதிவுத் துறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் காரணமாக, போலி பதிவுகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. வழிபாட்டுத் தலங்களுக்குரிய நிலங்கள், அரசுக்குச் சொந்தமான நிலங்களை இனி பதிவு செய்யமுடியாது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ. செந்தில்குமாரி, பதிவுத் துறை துணைத் தலைவா் ஜெகதீசன், உதவித் தலைவா் ரவீந்திரநாத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com