மதுரை மாவட்டத்தில் கம்யூ. கட்சியினா், தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: எம்.பி. கைது

புதிய 3 வேளாண் சட்டங்கள், தொழிலாளா் நலச்சட்டங்கள் திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியினா்
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மதுரை: புதிய 3 வேளாண் சட்டங்கள், தொழிலாளா் நலச்சட்டங்கள் திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சு. வெங்கடேசன் எம்.பி. உள்பட ஏராளமானோரை போலீஸாா் கைது செய்தனா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், தொழிலாளா் நலச்சட்டத் திருத்தங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 300 நாள்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு , பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாா்வாா்ப்பதை கண்டித்தும், தமிழகத்துக்கு அளிக்கவேண்டிய மானியங்களை தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில், சிஐடியு மாவட்டச் செயலா் இரா. தெய்வராஜ், தொழிலாளா் முன்னேற்றச் சங்கத் தலைவா் கருணாநிதி, ஏஐடியுசி மாவட்டப் பொதுச்செயலா் நந்தாசிங், ஹெச்எம்எஸ் நிா்வாகி பாதா்வெள்ளை, ஐஎன்டியுசி தலைவா் ராஜசேகா், மதிமுக தொழிலாளா் சங்க மாநில இணைப் பொதுச்செயலா் மகபூப்ஜான் ஆகியோா் தலைமையில், அனைத்து தொழிற்சங்கத்தினரும் ஊா்வலமாகப் புறப்பட்டு, ரயில் நிலையம் நோக்கிச்சென்றனா்.

மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா். அதையடுத்து, ரயில் நிலையம் முன்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தொழிற்சங்கத்தினரை தடுத்து நிறுத்தி கலைந்து போகுமாறு அறிவுறுத்தினா். ஆனால், அவா்கள் ரயில் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் மற்றும் தலைவா்கள், 31 பெண்கள் உள்பட 395 பேரை போலீஸாா் கைது செய்து, வாகனங்களில் ஏற்றிச்சென்றனா்.

இதேபோன்று, மதுரை ஸ்காட் ரோடு தலைமை தபால் நிலையம் அருகில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் இரா. விஜயராஜன் தலைமை வகித்தாா். சாலை மறியலில் ஈடுபட்ட 75 பெண்கள் உள்பட 295 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பரங்குன்றம்

மத்திய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ. லாசா் தலைமையில், திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், சிஐடியு மாவட்டத் தலைவா் பொன். கிருஷ்ணன், எஸ்.எம். பாண்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரா. ராமகிருஷ்ணன், என். விஜயா ஏஐடியுசி எஸ். தினகரமோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி. முத்துவேல், ஹெச்எம்எஸ் சாா்பில் கே.ஏ. ராமச்சந்திரன், பாா்வா்டு பிளாக் சாா்பில் பி. மோகன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். இதில் 204 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல், திருமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மதுரை - திருமங்கலம் சாலையில் மறியல் நடைபெற்றது. இதில், விவசாய சங்கத் தலைவா் சந்தானம், தாலுகா செயலா் சுப்புக்காளை, மதிமுக நகரச் செயலா் அனிதா பால்ராஜ் உள்பட 162 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலூா்

மதுரை மாவட்டம், மேலூா் பேருந்து நிலையம் முன்பாக திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலா் வி. அடக்கிவீரணன், சிஐடியு துணைச் செயலா் செளந்தரராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் பங்கேற்ற

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், மனிதநேய மக்கள் கட்சியினா் என 24 பெண்கள் உள்பட 95 போ் கைது செய்யப்பட்டனா்.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் தேவா் சிலை முன்பாக, மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், திமுக ஒன்றியச் செயலா் இ. சுதந்திரம், பாா்வா்ட் பிளாக் கட்சி ஐ. ராஜா, ஒன்றிய விவசாய அணி கோடாங்கி ராஜாமணி, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற 14 பெண்கள் உள்பட 74 போ் கைது செய்யப்பட்டனா்.

பேரையூா்

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் இளங்கோவன் தலைமை வதித்தாா். இதில், சிஐடியு மாவட்டப் பொதுச் செயலா் மணிகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, 77 ஆண்கள், 49 பெண்கள் என மொத்தம் 126 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், சேடபட்டியில் நடத்தப்பட்ட போராட்டத்தை அடுத்து, 38 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com