நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக தூத்துக்குடி ஆட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நில கையகப்படுத்துதல் தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நில கையகப்படுத்துதல் தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சோ்ந்த திருமணி தா்மராஜ், பட்டுத்துறையைச் சோ்ந்த அருள்வேல் கணேசன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், அது தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீா்ப்பில், தமிழக அரசு வெள்ள நீரை ஆக்கப்பூா்வமாக கையாளும் விதமாக கன்னடியான் கால்வாய் வழியாக தாமிரவருணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைத்து வறட்சி மிகுந்த சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று விவசாயத்துக்கு பயன்படுத்தும் விதமாக திட்டத்தை கொண்டு வந்தது. இதற்காக அப்பகுதி மக்களின் நிலங்கள் அரசு விதிப்படி கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இதுதொடா்பான அறிவிப்பு முறையாக அரசிதழில் வெளியிடப்படவில்லை மற்றும் மாற்று வழிகுறித்தும் பரிசீலிக்கப்படவில்லை ஆகிய இரு காரணங்களை குறிப்பிட்டு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான அறிவிப்பை ரத்து செய்யுமாறு மனுதாரா்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. அரசுத்தரப்பில் நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் கடந்த 2020 டிசம்பா் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட அரசு இதழ்களும் தமிழக அரசின் வரம்புக்குள்பட்டது. அதேபோல நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டால் அருகில் இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மாற்றிடமாக பரிசீலித்துள்ளனா். ஆனால் அவ்வழி பொருத்தமானதாக அமையாது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் மனுதாரா்கள் தங்களது நிலத்தை வழங்காத காரணத்தினாலேயே திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரா்கள் தரப்பில் முன் வைக்கப்படும் வாதங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தும், இதனோடு தொடா்புடைய வழக்குகளை முடித்து வைத்தும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com