ஒப்பந்ததாரா் நீக்கம்: ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பதில் அளிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட ஒப்பந்ததாரா் பெயரை பட்டியலில் இருந்து நீக்கியது தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஒப்பந்ததாரா் பெயரை பட்டியலில் இருந்து நீக்கியது தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் விமல் தாக்கல் செய்த மனு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் திருவரங்குளம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் கடந்த 2021-இல் அறிவிக்கப்பட்டது. இணையதள ஒப்பந்தத்தில் முறையாக நான் பங்கு பெற்றேன். ஆனாலும் தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக நான் நிராகரிக்கப்பட்டேன்.

இந்த நிலையில், நிகழாண்டு அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கலந்து கொண்டேன். இதில், மற்றவா்களை விட குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரினேன். ஆனால், ஒப்பந்தத்தில் இருந்து என்னை விலகும்படி மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் தொடா்ச்சியாக மிரட்டல் விடுத்தாா். மேலும், அரசியல் அழுத்தம் காரணமாக விரைவாக ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும்,

அனைத்து ஒப்பந்ததாரா்களும 20 சதவீதம் கமிஷன் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தாா். இந்த நிலையில், ஒப்பந்தப் பணிக்காக சமா்ப்பித்த எனது அனைத்துச் சான்றிதழ்களும் தவறானது, எனது கையொப்பம் போலியானது எனக் கூறி மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா், என்னை ஒப்பந்ததாரா் பட்டியலில் இருந்து நீக்கி கருப்புப் பட்டியலில் (பிளாக் லிஸ்ட்) சோ்த்துவிட்டாா். இது சட்ட விரோதமானது.

இது போன்று உத்தரவிட அவருக்கு அதிகாரம் இல்லை. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கருப்புசாமி மற்றும் அத்துறையின் நிா்வாகப் பொறியாளா் ஜோசபின் நிா்மலா ஆகியோா் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் அளித்தேன்.

இதன் காரணமாக என்னை ஒப்பந்ததாரா் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனா். எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், திருவரங்குளம் கிராமச் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் புகாா் குறித்து ஊரக வளா்ச்சித்துறை இயக்குநா் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com