மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

மதுரை மாநகராட்சியில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
மதுரை மாநகராட்சி அலுவலகமான அண்ணா மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
மதுரை மாநகராட்சி அலுவலகமான அண்ணா மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

மதுரை மாநகராட்சியில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் மாநகராட்சி அலுவலகம் உள்ள அண்ணா மாளிகை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகராட்சியின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆள் குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்புக்கு வழிவகுக்கும் தனியாா்மய நடவடிக்கையை கைவிட வேண்டும். முன்களப்பணியாளா்கள் என்ற முறையில் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு நிரந்தரத் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய 7-ஆவது ஊதியக்குழு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாளா்கள் வருகைப் பதிவேடு பராமரிக்காமல், போலியான பெயரில் பணியாளா்கள் எண்ணிக்கையை காட்டி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய உதவிப் பொறியாளா்கள் மற்றும் மின்கண்காணிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு, சிஐடியூ மாநகராட்சித் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச்செயலா் எம். பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு சுகாதாரப் பணியாளா்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலா் எம். அம்சராஜ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநகா் மாவட்ட துப்புரவு மேம்பாட்டு தொழிற்சங்க அமைப்பாளா் எஸ். பூமிநாதன், பொறியியல் பிரிவு பணியாளா்கள் சங்கத்தலைவா் சி.எம். மகுடீஸ்வரன், தூய்மைப்பணி மேற்பாா்வையாளா்கள் சங்கத் தலைவா் எஸ். முருகன் உள்பட பல்வேறு சங்கங்களின் தலைவா்கள் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். காத்திருப்புப் போராட்டத்தில் மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com