பாஜகவின் மதவெறி அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது: கே.பாலகிருஷ்ணன்

பாஜகவின் மதவெறிஅரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

பாஜகவின் மதவெறிஅரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

குடியரசு தின விழாவையொட்டி மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாரதியாா் சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் அக்கட்சியின் மாநிலச்செயலா் கே.பாலகிருஷ்ணன், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியது: குடியரசு தின விழாவில் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊா்தி தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்ற முதல்வா் அறிவிப்பை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

தமிழக விடுதலைப் போராட்ட வீரா்களை மறுதலிக்கும், தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் மோசமான போக்குக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும். திருக்குறள் ஆன்மிகத்தின் ஊற்றுக்கண் என ஆளுநா் குடியரசு தின வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளாா்.

திருக்குறளை ஆளுநா் முழுமையாக படித்தால் அதில் உள்ள கருத்துகள் தெரியும். திருக்குறள் என்பது அனைத்து மக்களுக்குமான புனித நூல். திருக்குறளில் ஆன்மிக கருத்துக்கள் மட்டுமல்ல அனைத்துக் கருத்துகளும் உள்ளன. பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்பது ஆன்மிக கருத்தல்ல, அதையும் தாண்டி திருக்குறள் சமூக நீதி, சமூக கருத்துக்கள், சமூக ஒடுக்குமுறை உள்ளிட்டவற்றை எடுத்துச்சொல்லும் நூலாக உள்ளது. திருக்குறளை ஆன்மிக நூல் என சுருக்குவது சரியில்லை. தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் இல்லாத ஒன்றை, இட்டுக்கட்டி கூறி மதவெறி அரசியலைப் பரப்ப நினைக்கும் பாஜகவின் செயல் பலிக்காது. இதர மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மதவெறி அரசியலுக்கு இடமில்லை. பாஜக இந்த முயற்சியில் படுதோல்வி அடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com