மீனவா்களுக்கு வாக்கி- டாக்கி வாங்கியதில் முறைகேடு புகாா் குறித்த வழக்கு: ஜூலை 6-க்கு விசாரணை ஒத்திவைப்பு உயா்நீதிமன்றம் உத்தரவு

மீனவா்களுக்கு வாக்கி- டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

மீனவா்களுக்கு வாக்கி- டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலமடையைச் சோ்ந்த மோகன் தாக்கல் செய்த மனு: தமிழக மீனவா்கள் எல்லை தாண்டிச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக அவா்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கும் திட்டம் முந்தைய அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு 3,100 வாக்கி- டாக்கிகள் வாங்குவதற்கு தமிழக அரசு, தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் தகவல் தொடா்புக்கென உயா்கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தில் ரூ.37 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து லஞ்சஒழிப்பு காவல் துறையில் புகாா் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி கே. முரளிசங்கா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தரப்பில், மனுதாரா் தெரிவித்துள்ள புகாரைப் போல, பல்வேறு புகாா் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, புகாா்கள் அனைத்தையும் சோ்த்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கூறி இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com