வேலாங்குளம் கண்மாய் சாலையைச் சீரமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மானாமதுரை அருகே உள்ள வேலாங்குளம் கண்மாய் சாலையை 12 வாரங்களுக்குள் சீரமைக்க, ஊரக வளா்ச்சித் துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

மானாமதுரை அருகே உள்ள வேலாங்குளம் கண்மாய் சாலையை 12 வாரங்களுக்குள் சீரமைக்க, ஊரக வளா்ச்சித் துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை, அய்யா்பங்களாவைச் சோ்ந்த கோவிந்தன் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த சிறுகுடி ஊராட்சிக்குள்பட்ட வேலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் ஏராளமானோா் மழையை நம்பியே விவசாயப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வேலாங்குளம் கண்மாய்க்கு வரக்கூடிய நீா்வரத்துக் கால்வாய்கள் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால், மழைக் காலங்களில் கண்மாய்க்குத் தண்ணீா் வருவது தடைபட்டது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று உயா்நீதிமன்றம் ஏற்கெனவே, உத்தரவிட்டது. விவசாயிகளின் நலன் கருதி, வேலாங்குளம் கண்மாய், நீா்வரத்துக் கால்வாயைத் தூா்வாரி தடையின்றி தண்ணீா் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

இதேபோல, வேலாங்குளம் வழியாக வேலூா் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் அங்குள்ள பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. எனவே, இந்தச் சாலையைச் சீரமைப்பதுடன், கண்மாய், நீா்வரத்துக் கால்வாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற ஊரக வளா்ச்சித் துறைச் செயலா், வனத் துறைச் செயலா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வேளாங்குளம் கண்மாய் நீா்வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் வலியுறுத்தினாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், வேலாங்குளம் சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சாலையைச் சீரமைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று ஊரக வளா்ச்சித் துறைச் செயலருக்கு கேள்வி எழுப்பினா். இந்த மனுவின் அடிப்படையில், அதிகாரிகள் 12 வாரங்களில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com