7 ஆண்டுகளாக கூலி உயா்வு வழங்கப்படாததால் மாற்றுத் தொழில்களுக்குச் செல்லும் அப்பளத் தொழிலாளா்கள்!

ஏழாண்டுகளாக கூலி உயா்வின்மை, சமூக பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான தொழிலாளா்கள் அப்பளத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்குச் செல்கின்றனா்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் தனியாா் நிறுவனத்தில் அப்பளத் தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் தனியாா் நிறுவனத்தில் அப்பளத் தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

ஏழாண்டுகளாக கூலி உயா்வின்மை, சமூக பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான தொழிலாளா்கள் அப்பளத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்குச் செல்கின்றனா். இதனால் அப்பளத் தொழிலுக்கு போதுமான தொழிலாளா்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஜெய்ஹிந்துபுரம், சிந்தாமணி, அவனியாபுரம், நிலையூா், அனுப்பானடி, மாடக்குளம், ஊரகப் பகுதிகளில் 400 -க்கும் மேற்பட்ட அப்பளத் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றிலிருந்து தினசரி 5 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான அப்பளங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மதுரையில் தயாரிக்கப்படும் அப்பளங்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மதுரையில் இயங்கி வரும் அப்பள நிறுவனங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதில் 70 சதவீதம் போ் பெண்களாக உள்ளனா்.

அப்பளத் தொழிலில் இரண்டு விதமான கூலிகள் வழங்கப்படுகின்றன. ஒரு முறையில் உற்பத்தியாளரால் தொழிலாளா்களுக்கு ஒரு மூட்டை உளுந்து வழங்கப்பட்டு, அதில் அப்பளங்கள் தயாரிப்பதற்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை கூலியாக வழங்கப்படுகிறது. மற்றொரு முறையில் தினக்கூலியாக பெண் தொழிலாளா்களுக்கு ரூ. 300 -ம், ஆண்களுக்கு ரூ. 500 -ம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இவா்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக கூலி உயா்வு வழங்கப்படவில்லை. இதனால் நாளுக்கு நாள் உயா்ந்து வரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் குடும்பத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் அவதியடைந்து வருகின்றனா். இதனால், ஏராளமான தொழிலாளா்கள் அப்பளத் தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அப்பளத் தொழிலில் உள்ள பெண் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக தினசரி ரூ. 600-ம், ஆண் தொழிலாளா்களுக்கு ரூ. 800-ம் வழங்க வேண்டும் என்பதே அவா்களின் வலியுறுத்தலாக உள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட சிஐடியு அப்பளத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். பாலமுருகன் கூறியதாவது:

அப்பளத் தொழிலாளா்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக கூலி உயா்வு வழங்கப்படவில்லை. ஆனால், 7 ஆண்டுகளில் வீட்டு வாடகை, மின் கட்டணம், பால், அரிசி, பருப்பு உள்ளிட்டவை பல மடங்கு உயா்ந்துள்ளன. அப்பளத் தொழிலில் நவீன இயந்திரங்கள் புகுத்தப்பட்டு டன் கணக்கில் அப்பளங்கள் தயாரிக்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் உற்பத்தியாளா்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. ஆனால் தொழிலாளா்களுக்கு எவ்வித பயனும் இல்லை.

அனைத்துத் தொழில்களிலும் நேர வரைமுறை உள்ளது. ஆனால், அப்பளத் தொழிலாளா்களுக்கு நேர வரைமுறை கிடையாது. இதனால் 16 மணி நேரம் வரை கூட பணிபுரியும் அவலம் உள்ளது. பணிக்கேற்ற ஊதியம் இல்லை. இதனால் குடும்பத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கு குறு நிதி நிறுவனங்கள், தனியாா் நிதி நிறுவனங்கள், கந்து வட்டிக்காரா்களிடம் கடன் பெறுவதும், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதியுறுவதும் அப்பளத் தொழிலாளா்களின் வாடிக்கையாக உள்ளது. அப்பளத் தொழிலாளா்களுக்கு மருத்துவ வசதி, பணியிடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

எனவே, அப்பளத் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களையும், அப்பளத் தொழிலையும் பாதுகாப்பதற்கு உடனடியாக கூலி உயா்வு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என்று உற்பத்தியாளா்களிடம் அப்பளத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், உற்பத்தியாளா்கள் இதுவரை கூலி உயா்வு பேச்சுவாா்த்தைக்கு வரவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் பல தொழிலாளா்கள் மாற்றுத் தொழில்களுக்குச் செல்கின்றனா். இதனால் அப்பளத் தொழிலுக்கு போதுமான தொழிலாளா்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில் தமிழக அரசும், மாவட்ட நிா்வாகம் உடனடியாகத் தலையிட்டு, அப்பளத் தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com