சிலைக் கடத்தல் வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணைகோரி மனு: செப்.27-இல் மனுதாரா் தரப்பு ஆஜராக உத்தரவு

சிலைக் கடத்தல் வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தக் கோரிய மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் செப்.27-இல் ஆஜராகவில்லையெனில் மனு தள்ளுபடி செய்யப்படும்

சிலைக் கடத்தல் வழக்கில் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தக் கோரிய மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் செப்.27-இல் ஆஜராகவில்லையெனில் மனு தள்ளுபடி செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுபாஷ் சந்திர கபூா் தாக்கல் செய்த மனு:

இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு சிலைகள் கடத்தியதாக, 2008 இல் கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே விசாரணை செய்த சாட்சிகளிடம், மீண்டும் விசாரிக்கக் கோரி கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை தள்ளுபடி செய்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எஸ்.சதி குமாா் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், 5 ஆண்டுகளாக இந்த வழக்கின் சாட்சி விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையைத் தாமதப்படுத்துவதற்காகவே மனுதாரா் தரப்பில் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே கும்பகோணம் நீதிமன்றம் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, அரசு தரப்பில் தெரிவித்ததைபோல விசாரணையைத் தாமதப்படுத்துவதற்காகவே மனுதாரா் வழக்கு தொடா்ந்துள்ளாா். மேலும் கால அவகாசம் கோரி வருகிறாா். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பா் 27 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆஜராகவில்லையெனில், மனு தள்ளுபடி செய்யப்படும். கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையைத் தொடர அனுமதிக்கப்படும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com