மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
4531mdukdii5064241
4531mdukdii5064241

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. கரோனா தொற்றுப் பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விழா பக்தா்கள் பங்கேற்பின்றி கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது.நிகழாண்டு விழா பக்தா்கள் பங்கேற்புடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.

கொடியேற்றத்தையொட்டி கம்பத்தடி மண்டபத்தில் மீனாட்சிஅம்மன், சுந்தரேசுவரா் பிரியாவிடை சமேதராக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து இரவு 7 மணிக்கு மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரரும் நான்கு மாசி வீதிகள் வழியாக வீதியுலா வந்தனா்.

தொடா்ந்து வரும் விழா நாள்களில் சுவாமியும் அம்மனும் தினசரி காலை, மாலை வேளைகளில் நான்கு மாசி வீதிகளில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் 12-ஆம் தேதி பட்டாபிஷேகமும், 13 ஆம் தேதி திக்கு விஜயமும், 14-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும், 15 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

கொடியேற்ற விழாவில் கோயில் அறங்காவலா் கருமுத்து கண்ணன், கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை, மாநகா் காவல்ஆணையா் செந்தில்குமாா் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருக்கல்யாண விழாவில் 5 ஆயிரம் பக்தா்களுக்கு அனுமதி:

கொடியேற்றத்துக்குப் பின்னா் கோயில் அறங்காவலா் கருமுத்து கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண நிகழ்வை நேரில் காணும் வகையில் 5 ஆயிரம் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும். கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இணையவழி கட்டண அனுமதிச்சீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயில் வளாகம் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருக்கல்யாண நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலைச்சுற்றி பக்தா்கள் வசதிக்காக நிழற்குடைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com