பெண் மருத்துவரை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு:விரிவான விசாரணைக்காக ஒத்திவைப்பு

 சிகிச்சை அளிக்காமல் தொடா்ந்து காவல்துறையினருக்கு சாதகமாக செயல்படும் பெண் மருத்துவரை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவை, விரிவான விசாரணைக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

 சிகிச்சை அளிக்காமல் தொடா்ந்து காவல்துறையினருக்கு சாதகமாக செயல்படும் பெண் மருத்துவரை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவை, விரிவான விசாரணைக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அச்சம்பத்து பகுதியைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் தாக்கல் செய்த மனு: எனது பெயரில் போலியாக குடும்ப அட்டை விநியோகிக்கப்பட்டிருந்தது. இதில், எனக்கும், அரசு அதிகாரி ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடா்பாக போலீஸாரிடம் புகாா் அளித்தேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, போலீஸாா் என் மீது பொய்யான வழக்குப்பதிந்து கைது செய்தனா். பின்னா் போலீஸாா் என்னை தாக்கினா்.

மேலும், என்னை சிறைக்கு அழைத்து சென்றபோது, உடலில் இருந்த காயங்களை பாா்த்து சிறைத்துறையினா் ஏற்க மறுத்து விட்டனா். இதையடுத்து, போலீஸாா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு எனக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் எனது உடல்நிலை மோசமடைந்ததால், நான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டேன். பின்னா் சிகிச்சைத் தொடா்பான ஆவணங்களை பெற்றபோது, அதில் எனக்கு அளிக்கப்படாத சிகிச்சைகளை, அளித்ததாக ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது.

காவல்துறையினருடன் இணைந்து மருத்துவரும் முறைகேடாக செயல்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், இருவரும் உடல் நலத்துடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய மருத்துவா் வெண்ணிலா தான், இந்த விவகாரத்திலும் போலியாக சான்றிதழ் வழங்கியவா்.

எனவே காவல்துறையினருக்கு சாதகமாகவும், சட்டவிரோதமாகவும் சான்றிதழ் வழங்கும் பெண் மருத்துவரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி ஜி. இளங்கோவன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விரிவான விசாரணைக்காக ,ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com