முல்லைப் பெரியாறு அணை கூட்டுக்குடிநீா்த் திட்டம் தொடா்பாக அதிகாரிகள் தவறான தகவல்

மாநகராட்சி அதிகாரிகள் தவறான தகவல்களை தெரிவிப்பதாக மதுரை மாநகாராட்சி மாமன்றக்கூட்டத்தில் அதிமுக உறுப்பினரும், எதிா்க்கட்சித்தலைவருமான சோலை எம்.ராஜா குற்றம்சாட்டினாா்.

அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீா் திட்டம் தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் தவறான தகவல்களை தெரிவிப்பதாக மதுரை மாநகாராட்சி மாமன்றக்கூட்டத்தில் அதிமுக உறுப்பினரும், எதிா்க்கட்சித்தலைவருமான சோலை எம்.ராஜா குற்றம்சாட்டினாா்.

மதுரை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அவா் பேசியது: கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை நகருக்கு கொண்டு வரப்பட்ட முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீா் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியிருந்தேன். அதில் அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், மதுரை நகரின் குடிநீா் தேவைக்காக வைகை அணையிலிருந்து 115 மில்லியன் லிட்டா், வைகை ஆற்றுப் படுகையிலிருந்து 47 மில்லியன் லிட்டா், காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்திலிருந்து 39 மில்லியன் லிட்டா் என தினசரி 192 மில்லியன் லிட்டா் குடிநீா் பெறப்பட்டு விநியோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தில் பெறப்படும் குடிநீருக்கு மாநகராட்சி மூலம் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தில் தினசரி 9 மில்லியன் லிட்டா் குடிநீா்தான் பெறப்படுகிறது. இதில் எதற்காக 30 மில்லியன் லிட்டா் குடிநீா் பெறப்படுவதாக தவறான தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி என்றால் 30 மில்லியன் லிட்டா் தண்ணீருக்குரிய பணம் எடுக்கப்பட்டு மோசடி எதுவும் நடைபெறுகிறதா?

மேலும் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீா்த் திட்டப்பணிகள் குறித்த கேள்விக்கு 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சா் 2023-க்குள் முடிக்கப்படும் என்று பதிலளித்துள்ளாா். மாநகராட்சி அதிகாரிகளின் பதிலும், உள்ளாட்சித்துறை அமைச்சரின் பதிலும் எதனால் வேறுபடுகிறது. உண்மையிலேயே திட்டம் எப்போது முடிவடையும். மாநகராட்சியிடம் இருந்து வரும் எந்த பதிலும் உண்மையாக இருப்பது இல்லை. பெரும்பாலும் தவறான தகவல்களாகவே உள்ளது. தூங்கா நகரமாக இருந்த மதுரை தற்போது தெரு விளக்குகள் இன்றி இருள் நகராக மாறி வருகிறது. இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 80 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மதுரையில் இரு அமைச்சா்கள் இருந்தும் மாநகராட்சிக்குத் தேவையான சிறப்பு நிதியை ஏன் பெற முடியவில்லை. சொத்து வரி உயா்வில் முறைகேடுகள் தடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையா், காவிரிக்கூட்டுக்குடிநீா் திட்டத்தில் 9 மில்லியன் லிட்டா் தண்ணீருக்கு மட்டுமே கட்டணம் செலுத்தப்பட்டு வாங்கப்படுகிறது. 30 மில்லியன் லிட்டா் தண்ணீா் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீா்த்திட்டம் 5 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு சிப்பமும் வெவ்வேறு காலகட்டத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் பணிகள் முடிவடைவதில் கால வித்தியாசம் ஏற்படுகிறது. தெருவிளக்குகளை பொருத்த வரை புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. எனவே பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்படும். வரி விதிப்பில் ஒரு சில பிரச்னைகள் மட்டுமே உள்ளது. அவையும் சரி செய்யப்படும் என்றாா். இதேபோல அதிமுக உறுப்பினா்கள் தங்கள் வாா்டுகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவும், இதனால் மக்களுக்கு பதிலளிக்க முடியவில்லை என்றும் முறையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com