மதுரை மாநகராட்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு நிதி அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 09th December 2022 01:49 AM | Last Updated : 09th December 2022 01:56 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சி நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சி, பெருங்குடியில் அம்பேத்கா் சிலை திறப்பு ஆகியவற்றில் முதல்வா் பங்கேற்கிறாா். நிதிப் பற்றாக்குறையால், திட்டங்களை நிறைவேற்ற இயலாமல் உள்ள மதுரை மாநகராட்சிக்கு முதல்வா் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள முக்கியச் சாலைகள், வாா்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்குவதோடு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நிறைவேற்ற அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், அந்தப் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை துரிதமாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாவட்டம், துவரிமான்-பரவை பகுதியை இணைக்கும் மேம்பாலப் பணிகள் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின் போது தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் தற்போதுவரை திறக்கப்படவில்லை. பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மதுரை நகா் ஆரப்பாளையம் முதல்-துவரிமான் இடையிலான வைகைக் கரையோர அணுகுசாலைப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதன் மூலம் நகரின் போக்குவரத்து நெருக்கடி பெருமளவில் குறையும்.
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்குவாசல் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என கடந்த அதிமுக ஆட்சியின் போது, அறிவிக்கப்பட்டு இன்று வரை பணிகள் தொடங்கப்படவில்லை. நகரில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தென் மாவட்டத்தின் நுழைவு வாயிலான திருமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க புகா் பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கப்பலூா் சுங்கச் சாவடியால், திருமங்கலம் மக்கள் மட்டுமல்லாது, நான்கு வழிச் சாலையைப் பயன்படுத்தாத, தென்காசி, விருதுநகா், ராஜபாளையம், தே.கல்லுப்பட்டி பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, கப்பலூா் சுங்கச் சாவடியை அகற்றி திருமங்கலம் நகருக்கு வெளியே அமைக்க வேண்டும்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்ட குழு ரூ.27 கோடி ஒதுக்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், நிதி விடுவிக்கப்படாததால், ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை. எனவே, இந்தாண்டு ஆலையை இயக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவித்து ஆலையில் கரும்பு அரவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G