தொழிலதிபரின் இரு மகள்களைக் கடத்திச் சென்று ரூ. 50 லட்சம் பறிப்பு: 10 பேருக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் தொழிலதிபரின் இரு மகள்களைக் கடத்திச் சென்று, ரூ.50 லட்சம் பறித்த வழக்கில், இரண்டு பெண்கள் உள்பட 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரையைச் சோ்ந்த தொழிலதிபா் காா்த்திகை செல்வம். இவரின் மகள்கள் அனுஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகியோா் மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் படித்தனா். கடந்த 16.12.2017-இல், இருவரும் காரில் பள்ளிக்குச் சென்றனா். கருப்பாயூரணி அருகே காா் சென்ற போது, அந்தக் கும்பல் ஓட்டுநா் பாண்டியைத் தாக்கிவிட்டு சிறுமிகள் இருவரையும் கடத்திச் சென்றது.
இந்த நிலையில், கடத்தல் கும்பல், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டினா். இதையடுத்து, கடத்தல் கும்பலுக்கு
ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. பின்னா், சிறுமிகள் இருவரையும் வீட்டருகே நள்ளிரவு அக்கும்பல் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது.
இதுதொடா்பாக புகாரின் பேரில், தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். கடத்தலில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன், கண்ணன், மணிராஜு, மணிகண்டன், வைரமுத்து, குணசேகரன், ராதாகிருஷ்ணன், கலாதேவி, ஜீவிதா, சின்னதுரை ஆகிய 10 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரை, இரு பெண்கள் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.