பொங்கல் பரிசுத் தொகுப்பில் காலாவதி பொருள்கள் விநியோகம் தவிா்க்கப்படுமா?

குடும்ப அட்டைதாரா்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில் காலாவதியான மற்றும் காலாவதி தேதியை நெருங்கும் நிலையிலுள்ள பொருள்கள் வழங்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
உப்பு பொட்டலத்தில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட பொட்டலமிட்ட தேதி. ~மிளகாய்ப் பொடி பொட்டலத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தும் இரு தேதிகள்.
உப்பு பொட்டலத்தில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட பொட்டலமிட்ட தேதி. ~மிளகாய்ப் பொடி பொட்டலத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தும் இரு தேதிகள்.

குடும்ப அட்டைதாரா்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில் காலாவதியான மற்றும் காலாவதி தேதியை நெருங்கும் நிலையிலுள்ள பொருள்கள் வழங்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு 21 வகையான பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. பொருள்கள் விநியோகம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு புகாா்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் உணவுப் பொருள்களில் சில காலாவதியான பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

குறிப்பாக, மதுரை எச்.எம்.எஸ். காலனியில் உள்ள நியாய விலைக் கடையில் (கடை எண் 1) பொங்கல் பரிசுத் தொகுப்பில் காலாவதியான உப்புப் பொட்டலம் வழங்கப்பட்டுள்ளது. பொட்டலமிடப்பட்ட தேதி 06 -2018 என அச்சிடப்பட்டுள்ளது. பொட்டலமிடப்பட்ட தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். ஆனால், தேதி அச்சிடப்பட்ட பகுதி மீது கறுப்பு மையினால் அழிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மிளகாய்ப் பொடி பொட்டலத்தில், பொட்டலமிடப்பட்ட தேதி 28.5.2021 என அச்சிடப்பட்டுள்ளது. அத்தேதி அடிக்கப்பட்டு, அதன் அருகிலேயே 29.11.2021 என அச்சிடப்பட்டிருக்கிறது. இதில் எது உண்மையான தேதி என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல, தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஏராளமான மளிகைப் பொருள்கள் காலாவதி தேதியை நெருங்கக் கூடியதாக இருக்கின்றன. இத்தகைய பொருள்களை விநியோகம் செய்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொருள்களைப் பெற்ற குடும்ப அட்டைதாரா்கள் கூறுகையில், நல்ல நோக்கத்திற்காக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது பாராட்டுக்குரியது. ஆனால், அவை தரமானவையாக இருக்க வேண்டும். சாதாரணமாக கடைகளில் பொருள்கள் வாங்கும்போது விலையிலோ அல்லது தயாரிப்புத் தேதியிலோ திருத்தம் இருந்தால் அவற்றை வாங்குவதில் தயக்கம் இருக்கும். ஆனால், அரசே கொள்முதல் செய்து வழங்கும் உணவுப் பொருள்களில் அச்சிடப்பட்ட தேதி அழிக்கப்பட்டும், பொட்டலமிட்ட தேதியே இல்லாமல் வழங்குவதும் ஏற்புடையதல்ல.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கான உணவுப் பொருள்கள் கொள்முதல் செய்யும்போது, சமீபத்திய தயாரிப்புகளை தவிா்த்து, காலாவதி தேதியை நெருங்கும் பொருள்களை கொள்முதல் செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்றனா்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியது: பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தைக் கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு உணவுப் பொருள்களின் தயாரிப்புத் தேதியை ஆய்வு செய்து அதன் பிறகே விநியோகத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆகவே, காலாவதியான பொருள்கள் வருவதற்கு 99 சதவீதம் வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருப்பின் அத்தகைய பொருள்களை கடைகளில் இருந்து திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com