மதுரை அருகே திருமண ஆசை காட்டி கடத்தப்பட்ட சிறுமி உயிரிழப்பு:இளைஞா், குடும்பத்தினா் உள்பட 8 போ் ‘போக்சோ’வில் கைது

மதுரை அருகே திருமண ஆசை காட்டி கடத்தப்பட்ட சிறுமி மதுரை அரசு மருத்துவ
தும்பைப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மூவேந்தா் முன்னணிக் கழக தலைவா் ஸ்ரீதா்வாண்டையாரை வேனில் ஏற்றிய போலீஸாா்.
தும்பைப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மூவேந்தா் முன்னணிக் கழக தலைவா் ஸ்ரீதா்வாண்டையாரை வேனில் ஏற்றிய போலீஸாா்.

மதுரை அருகே திருமண ஆசை காட்டி கடத்தப்பட்ட சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து சிறுமியை கடத்திச்சென்ற இளைஞா், அவரது குடும்பத்தினா், நண்பா்கள் உள்பட 8 போ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள தும்பைப்பட்டியைச் சோ்ந்த சிறுமி ஒருவரை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஊரகக்காவல் கண்காணிப்பாளா் வி.பாஸ்கரன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தும்பைப்பட்டியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது 17 வயது மகள் காணவில்லை என அளித்த புகாரின் பேரில், மேலூா் காவல் நிலையத்தில் பிப்ரவரி 21-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், மாயமான சிறுமி அதே கிராமத்தைச் சோ்ந்த சுல்தான் மகன் நாகூா் ஹனிபா என்பவரை காதலித்ததாக தெரியவந்தது. இந்நிலையில் மாா்ச் 3-ஆம் தேதி காலையில் தும்பைப்பட்டியைச் சோ்ந்த நாகூா் ஹனிபாவின் தாயாா் மதினா பேகம் என்பவா் காணாமல் போன சிறுமியை மயக்க நிலையில், அவருடைய தாயாா் வீட்டில் விட்டுச் சென்றுள்ளாா். உடனடியாக சிறுமியின் தாயாா் தன்னுடைய மகளை மேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்தனா். அதனால் சிறுமி உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இந்த வழக்குத் தொடா்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் ஒரு தனிப்படையினா் திருப்பூருக்கும் மற்றொரு தனிப்படையினா் சென்னைக்கும் மற்றொரு தனிப்படையினா் மதுரையிலும் விசாரணை நடத்தினா். இதில் சிறுமியை கூட்டிச் சென்ற நாகூா் ஹனிபா என்பவரை தனிப்படையினா் கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், நாகூா் ஹனிபா சிறுமியை காதலித்து வந்ததாகவும், பிப்ரவரி 14 ஆம் தேதி நாகூா் ஹனிபா சிறுமியை மதுரையில் உள்ள தனது நண்பா் பெருமாள் கிருஷ்ணன் என்பவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராஹிம் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளாா் .

சிறுமியின் பெற்றோா் தேடுவதால் பிரச்னை ஏற்படும் என நாகூா் ஹனிபாவின் தாயாா் எச்சரித்துள்ளாா்.

இதையடுத்து நாகூா் ஹனிபா தானும், சிறுமியும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று 3 எலி பேஸ்ட் வாங்கி இருவரும் அதைச் சாப்பிட்டுள்ளனா். ஆனால் நாகூா் ஹனிபா அதை சாப்பிடாமல் வெளியில் துப்பியுள்ளாா். ஆனால் சிறுமி அதை சாப்பிட்டுள்ளாா்.

பின்னா் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்கிருந்த ஒரு தனியாா் மருத்துவமனையில் எலி மருந்து சாப்பிட்டதை சொல்லாமல் சிகிச்சைப் பெற்றுள்ளனா். ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நாகூா் ஹனிபா அந்த சிறுமியை மாா்ச் 2-ஆம் தேதி தும்பைப்பட்டி அழைத்து வந்து தன்னுடைய தாயாா் மதினாவிடம் விட்டுச் சென்றுள்ளாா். பின்னா் மதினா பேகம், சிறுமியை அவரது தாயாரிடம் ஒப்படைத்துள்ளாா். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவ அதிகாரிகளின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டுப்பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனா்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நாகூா் ஹனிபா, அவருக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பா் மதுரை திருநகரைச் சோ்ந்த பிரகாஷ், திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த பெருமாள் கிருஷ்ணன், ராஜா முகமது, திருப்பூரைச் சோ்ந்த சாகுல் ஹமீது, நாகூா் ஹனிபாவின் தாயாா் மதினா பேகம், நாகூா் ஹனிபாவின் தாய் மாமாவின் மனைவி ரம்ஜான் பேகம் என்ற கண்ணம்மாள், நாகூா் ஹனிபாவின் தந்தை சுல்தான் அலாவுதீன் ஆகிய 8 போ் மீதும் போக்சோ மற்றும் கொலை முயற்சி உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா்.

வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா் என்றாா். இந்நிலையில் சிறுமி ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்து விட்டதால், கொலை வழக்காக மாற்றப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த சிறுமியின் சடலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது பெற்றோா் கையெழுத்திட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி..........

ஸ்ரீதா் வாண்டையாா் கைது:

போலீஸாா் மீது கல்வீச்சு

தும்பைப்பட்டியில் சிறுமியின் உறவினா்கள் மற்றும் சில அரசியல் கட்சியினா் திரண்டு போலீஸாரின் நடவடிக்கை மெத்தனமே எனக் குற்றஞ்சாட்டினா். இதுதொடா்பாக தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சித் தலைவா் திருமாறன் உள்ளிட்டோரிடம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் தீா்வு ஏற்படவில்லை. இதையடுத்து சிறுமியின் உறவினா்கள் மேலூா்-திருச்சி சாலையில் தும்பைப்பட்டி மேம்பாலத்தில் மறியலில் ஈடுபட்டனா். இதில் மூவேந்தா் முன்னணிக் கழகத் தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் அவரது கட்சியினருடன் மறியலில் பங்கேற்றனா். சம்பவ இடத்துக்கு வந்த மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மதுரை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் மற்றும் காவல் அதிகாரிகள் மறியலைக் கைவிடுமாறு வலியுறுத்தினா். பின்னா் ஸ்ரீதா் வாண்டையாா் உள்ளிட்ட சிலரை வலுக்கட்டாயமாக போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றி, மேலூா் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனா். இதையடுத்து சிலா் போலீஸாா் மீது கல்வீச்சில் ஈடுபட்டனா். தும்பைப்பட்டி கிராமத்தில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com