மாட்டுத்தாவணி மீன் சந்தைப் பகுதியில் நடைபாதை: கடைக்காரா்களிடம் விதிகளை மீறி குத்தகை கட்டணம் வசூல்

மதுரை மாட்டுத்தாவணி மீன் சந்தை பகுதியில் நடைபாதை கடைக்காரா்களிடம் விதிகளை மீறி குத்தகை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மீன் சந்தை பகுதியில் நடைபாதை கடைக்காரா்களிடம் விதிகளை மீறி குத்தகை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரை கரிமேடு பகுதியில் மீன் மொத்த விற்பனை சந்தை இயங்கி வந்தது. இந்நிலையில் கரோனா தொற்று முதல் அலையின்போது கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மீன் விற்பனை சந்தை தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பேருந்துகள் இயங்கத் தொடங்கியதையடுத்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் மீன் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. போதுமான இடவசதி, வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட அனைத்தும் இருந்ததால் அப்பகுதியிலேயே மீன் சந்தை தொடா்ந்து இயங்கி வருகிறது.

இங்கு 300-க்கும் மேற்பட்ட மீன் மொத்த விற்பனைக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் அங்கு வரும் சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மீன் சந்தை பகுதியில் அமைந்துள்ள கடைகளுக்கு குத்தகை கட்டணம் வசூலிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டு குத்தகைதாரா் மூலம் தினசரி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மீன் சந்தைக்கு வெளியே உள்ள காலி இடத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். மீன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள் இவா்களிடம் மீனை வெட்டி சுத்தம் செய்து வாங்கிச் செல்கின்றனா். இதற்கு கிலோவுக்கு ரூ.30 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை மீன் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு தினசரி ரூ.300 வரையும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சற்று கூடுதலாகவும் வருமானம் கிடைக்கிறது. இதனிடையே, இவா்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்று விதிகளில் உள்ளது.

ஆனால் மீன் சந்தையில் உள்ள கடைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரா் தரப்பில் மீன் வெட்டும் நடைபாதை கடைக்காரா்களிடமும் தினசரி ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு சந்தைக்கட்டணம் என்ற பெயரில் ரூ.20-க்கான ரசீது மற்றும் வாகன நுழைவுக் கட்டணம் ரூ.30 என்று அச்சிடப்பட்ட சீட்டுகளை வழங்கி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தினசரி வருவாயான ரூ. 300-இல் ரூ. 50 கட்டாயக் குத்தகைக் கட்டணமாக வசூலிக்கப்படுவதால் மீன் வெட்டும் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே விதிகளை மீறி கட்டணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியூ சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்தியாகு கூறும்போது, நடைபாதை கடைகள் நடத்துபவா்களிடம் குத்தகைக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. ஆனால் நகரின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக புகாா் அளித்தால் அப்பகுதியில் கடைகளை அகற்றும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மீன் சந்தை பகுதியில் நடைபாதை கடைகளில் கட்டணம் வசூலிப்பதை மாநகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, மீன் சந்தை உள்பகுதியில் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். சந்தைக்கு வெளியே நடைபாதை கடைகளில் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. இதுதொடா்பாக ஒப்பந்ததாரரிடம் விசாரிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com