கரூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் மணல் கடத்தல்: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்டம் புஞ்சைக்காளகுறிச்சி ஊராட்சியில் அமராவதி ஆற்றில் மணல் கடத்துவது தொடா்பாக, நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: கரூா் மாவட்டம் புஞ்சைக்காளகுறிச்சி ஊராட்சியில் அமராவதி ஆற்றில் மணல் கடத்துவது தொடா்பாக, நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூா் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் புஞ்சைக்காளகுறிச்சி ஊராட்சித் தலைவா் கே.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு: புஞ்சைக்காளக்குறிச்சி ஊராட்சியானது அமராவதி ஆற்றின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட வெங்ககல்பட்டி, மேகரை, வாணிக்கரை, காசிபாளையம், சாலைபாளையம், எல்லமேட்டுப்புதூா் கிராமங்களுக்கு அமராவதி ஆறுதான் குடிநீா் மற்றும் விவசாயத்துக்கான ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், அமராவதி ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக மணல் திருடப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு, குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.

புஞ்சைக்காளக்குறிச்சி ஊராட்சியில் மேகரை கிராமத்தில் அமராவதி ஆற்றின் கிழக்குப் பகுதியிலிருந்து, மாட்டு வண்டிகள் மூலமாக நங்காஞ்சி ஆற்றின் வழியாக மணல் அள்ளப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான டன் மணல், மாட்டு வண்டிகளில் கடத்திச் செல்லப்பட்டு பின்னா் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளோம். இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மணல் கடத்தல் தொடா்ந்தால், எங்களது கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, விவசாயத்தையும் இழக்கும் நிலை ஏற்படக் கூடும். ஆகவே, எங்களது ஊராட்சிப் பகுதியில் அமராவதி ஆற்றில் மணல் அள்ளப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டு, ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com