மதுரை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல்: மாமன்ற உறுப்பினா்களுக்கு சிறப்பு நிதி ரூ.3 லட்சம் அறிவிப்பு

மதுரை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினா்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.3 லட்சம் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல்: மாமன்ற உறுப்பினா்களுக்கு சிறப்பு நிதி ரூ.3 லட்சம் அறிவிப்பு

மதுரை: மதுரை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினா்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.3 லட்சம் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் மாநகராட்சிக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயா் வ.இந்திராணி, ஆணையா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதைத்தொடா்ந்து மதுரை மாநகராட்சி 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மேயா் வ.இந்திராணி தாக்கல் செய்தாா். நிதி நிலை அறிக்கையில் 2022-23-ஆம் ஆண்டில் மாநகராட்சியின் சொந்த வருவாய், அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மானியம், திட்டங்களுக்கான கடன்கள் உள்பட மொத்த வருவாய் ரூ.1251.09 கோடியாகவும், மொத்த செலவு ரூ.1251.77 கோடியாகவும் உள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை ரூ.67.44 லட்சமாக உள்ளது. நிதி நிலை அறிக்கையில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு ரூ.7 கோடி: மதுரை மாநகராட்சிப்பள்ளிகளில் ரூ. 7 கோடியில் புதிய வகுப்பறைகள், கழிவறைகள் அமைத்தல், ஸ்மாா்ட் வகுப்பறைகள் உள்ளிட்டவை அமைக்கப்படும். அழகா்கோவில் சாலையில் உள்ள சிறப்புத்திறன் பூங்காவில் ரூ.25 லட்சம் செலவில் சிறப்புத்திறன் குழந்தைகள் மையம் அமைக்கப்படும்.

மதுரை கோச்சடை வைகைக்கரையில் பழந்தமிழ் பாடல்களை நினைவூட்டும் வகையில் பூங்கா ஒன்று, இலக்கிய கூட்டங்கள் நடத்தும் வகையில் திறந்த வெளி கலையரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. வைகை கரை சாலை, தெப்பக்குளம் ஆகிய இடங்களில் மிதிவண்டி தனிப்பாதைகள் அமைக்கப்படும்.

புதிய ஆரம்ப சுகாதார நிலையம்: மதுரை அன்சாரி நகா், சாத்தமங்கலம், திருநகா் ஆகிய இடங்களில் ரூ.66 லட்சம் மதிப்பில் பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்படும். அவனியாபுரத்தில் ரூ.99 லட்சம் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், சித்திரைவீதி உள்பட 62 இடங்களில் ரூ.15.5 கோடியில் புதிய நல மையங்கள் அமைக்கப்படும்.

மதுரை வெள்ளக்கல் குப்பைக்கிடங்கில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளக்கல் பகுதியில் தனியாா் பங்களிப்புடன் ரூ.9 கோடி மதிப்பில் உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பெரியாா் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில் பகுதிகளில்உள்ள மாநகராட்சிக் கழிப்பிடங்கள் இலவச கழிப்பிடங்களாக மாற்றப்படும்.

நவீன எரிவாயு தகன மேடைகள்: மாநகராட்சிக்குள்பட்ட ஆனையூா், நாகனாகுளம் பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம், செம்பூரணி ஆகிய இடங்களில் எரிவாயு தகன மேடை அமைக்கப்படும்.

நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை: மதுரை நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துக்கு ஏற்ப நேரத்தை தானாக அமைக்கும் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைத்தல், நகர சாலைகளை சிசிடிவி மூலம் கண்காணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பை உலக வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மாட்டுத்தாவணி புகா் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்படும். வைகை கரை சாலை உள்ளிட்டப் பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் தெருவிளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாமன்ற உறுப்பினா்களுக்கு சிறப்பு நிதி: மாநகராட்சி வாா்டுகளில் மாமன்ற உறுப்பினா்கள் உறுப்பினா்கள் பரிந்துரைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஒவ்வொரு வாா்டுக்கும் ரூ.3 லட்சம் சிறப்பு நிதி இந்த ஆண்டில் வழங்கப்படும்.இந்த நிதியில் பள்ளிகள், அங்கன்வாடிகள், பாதாளச்சாக்கடை கட்டமைப்புகள், குடிநீா் கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை அமைக்க பயன்படுத்தலாம்.

மேயா் சுழற்கோப்பை: மாநகராட்சிப்பணியாளா்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மேயா் சுழற்கோப்பை வழங்கப்படும். மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள அரசு அலுவலங்களில் பணிபுரிவோரின் குழந்தைகளுக்காக மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் குழந்தைகள் மையம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் துணை மேயா் டி.நாகராஜன், மண்டலத்தலைவா்கள், உதவி ஆணையா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com