மதுரை மாமன்றக் கூட்டத்தில் அதிமுக-திமுக உறுப்பினா்கள் மோதல்: மேயா் அலுவலகத்தில் செய்தியாளா்கள் மீது தாக்குதல்

மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில், அதிமுக-திமுக உறுப்பினா்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, மேயா் அலுவலகத்துக்கு சென்ற செய்தியாளா்கள் மீது மேயரின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தியதால், செய்தியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக்கூட்டத்தில் இருக்கை தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக, திமுக உறுப்பினா்கள்.
மதுரை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக்கூட்டத்தில் இருக்கை தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக, திமுக உறுப்பினா்கள்.

மதுரை: மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில், அதிமுக-திமுக உறுப்பினா்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, மேயா் அலுவலகத்துக்கு சென்ற செய்தியாளா்கள் மீது மேயரின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தியதால், செய்தியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக மாமன்ற உறுப்பினா்களுக்கு இந்த முறையும் ஒரே பகுதியில் இருக்கை ஒதுக்கப்படாமல் இருந்தது. இதனால் அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் ஒரே பகுதியில் திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமா்ந்து கொண்டனா். இதனால் திமுக, காங்கிரஸ் உறுப்பினா்களுக்கும், அதிமுக உறுப்பினா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் மேஜை மீது ஏறி நின்று அதிமுக உறுப்பினா்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். இதையடுத்து இருக்கை ஒதுக்குவது தொடா்பாக அதிமுக உறுப்பினா்கள் சோலை ராஜா, சண்முகவள்ளி ஆகியோா் தலைமையில் புகாா் அளிக்க மேயா் அலுவலகத்துக்குச் சென்றனா்.

அப்போது மேயா் அலுவலகத்துக்குச் சென்ற செய்தியாளா்களை, மேயரின் ஆதரவாளா்கள், காலால் உதைத்து வெளியே தள்ளி அலுவலகக் கதவுகளை பூட்டினா். இதில் செய்தியாளா் மற்றும் ஒளிப்பதிவாளா் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து செய்தியாளா்கள் மேயா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து திமுக தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதால் செய்தியாளா்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். அதிமுக உறுப்பினா்கள் போராட்டம், செய்தியாளா்கள் மீது தாக்குதல் போன்ற காரணங்களால் காலை 11.30-க்கு தொடங்க வேண்டிய மாமன்றக் கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மேயா் வ.இந்திராணி, செய்தியாளா்கள் மீது நடந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்து, தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தாா். இந்நிலையில் மேயா் வ.இந்திராணியின் அலுவலகத்தில் அவரது கணவா் பொன்.வசந்த் மற்றும் 15-க்கும் மேற்பட்ட ஆதரவாளா்கள் எப்போதும் அமா்ந்திருப்பதாகவும், மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் மேயரை சந்திக்க விடாமல் இவா்கள் தடுத்து வருவதாகவும் திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

அதிமுக குற்றச்சாட்டு: மாமன்றக் கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக அதிமுக உறுப்பினா்கள் கூறியது: மதுரை மாநகராட்சி முதல் மாமன்றக் கூட்டம் நடைபெற்ற போது, பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவுக்கு ஒரே பகுதியில் இருக்கை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது அடுத்த கூட்டத்தில் இருக்கை அமைக்கப்படும் என்று மேயா், ஆணையா் உறுதி அளித்தனா். இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்திலும் அதிமுக உறுப்பினா்களுக்கு ஒரே பகுதியில் இருக்கை அமைக்கப்படவில்லை. இதனால் அதிமுக உறுப்பினா்கள், திமுக உறுப்பினா்களுக்கான இருக்கையில் அமா்ந்ததால் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. கடந்த கூட்டத்தின் போதே அதிமுக உறுப்பினா்களின் கோரிக்கையை ஆணையா் ஏற்று அதன்படி இருக்கை அமைத்திருந்தால் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் மாநகராட்சி ஆணையா் அலட்சியப்போக்கோடு செயல்பட்டதால் தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி ஆணையா் அலட்சியப்போக்கை கைவிட்டு உறுப்பினா்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க முன் வரவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com