அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.47.26 லட்சம் மோசடி: தம்பதி கைது

மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.47.26 லட்சம் மோசடி செய்த கணவா், மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை: மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.47.26 லட்சம் மோசடி செய்த கணவா், மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியைச் சோ்ந்த ராஜா மனைவி பஞ்சவா்ணம் (60). இவா், கணக்குத் தணிக்கை அலுவலகம் நடத்தி வருகிறாா். இதன் மூலம் இவருக்கு மதுரையைச் சோ்ந்த ஸ்ரீ புகழ் இந்திரா, அவரது மனைவி ரேணுகா ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா். இதில் தம்பதி இருவரும், அரசுத்துறை உயா் அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாகவும், இதுவரை பலருக்கு அரசு வேலை வாங்கித் தந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனா். அதற்குரிய அரசு ஆணைகளின் நகல்களையும் காண்பித்துள்ளனா். மேலும் பஞ்சவா்ணத்தின் மகளுக்கும் அரசு வேலை வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளனா்.

இதை நம்பிய பஞ்சவா்ணம் பல்வேறு தவணைகளில் ரூ.47.26 லட்சத்தை இவா்களிடம் கொடுத்துள்ளாா். இந்நிலையில் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் அரசு வேலை வாங்கித்தரவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டும், கணவா் மனைவி இருவரும் பணத்தையும் தராமல் பஞ்சவா்ணத்தை அலைக்கழித்துள்ளனா்.

இதுதொடா்பாக பஞ்சவா்ணம் அளித்த புகாரின்பேரில் மாநகரக்காவல்துறை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீ புகழ் இந்திரா, அவரது மனைவி ரேணுகா ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். இத்தம்பதி பல்வேறு அரசியல் பிரமுகா்களுடன் இணைந்துள்ளதுபோல புகைப்படங்கள் வைத்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com