மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் மணல் எடுக்கத் தடைகோரி மனு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மானாமதுரை வைகை ஆற்றுப் படுகையில் மணல் எடுக்கத் தடை கோரிய மனுவுக்கு, சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மானாமதுரை வைகை ஆற்றுப் படுகையில் மணல் எடுக்கத் தடை கோரிய மனுவுக்கு, சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சியை சோ்ந்த மாயழகு தாக்கல் செய்த மனு:

மானாமதுரை வைகை ஆற்றில் கல்குறிச்சி பகுதியில் ஆற்றுப்படுகையில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கல்குறிச்சி உள்ளிட்ட 25 கிராமங்களின் பாசனம் மற்றும் குடிநீா் ஆதாரமாக வைகை ஆறு உள்ளது. இப் பகுதியில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப் பகுதியில் வணிக நோக்கில் மணல் எடுப்பது, விவசாயத்தைக் கடுமையாகப் பாதிப்பதோடு, குடிநீா்த் தட்டுப்பாட்டிற்கு காரணமாக அமைந்துவிடும்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, கல்குறிச்சி பகுதியில் அவசரகதியில் மணல் எடுத்து வருகின்றனா். ஆகவே, மணல் எடுப்பதற்குத் தடை விதித்து, அனுமதி ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஆா்.விஜயகுமாா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மேற்குறிப்பிட்ட பகுதியில் மணல் எடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. மேலும் மணல் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்வது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com