இந்திய குடிமைப்பணித் தோ்வுப் பயிற்சி: மீனவப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

இந்திய குடிமைப் பணித் தோ்வுக்கு பயிற்சி பெற விரும்பும் மீனவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : மீன்வளம், மீனவா் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ குடும்பங்களைச் சோ்ந்த பட்டதாரிகளை தோ்ந்தெடுத்து குடிமைப் பணிகள் தோ்வுக்கான பயிற்சி வழங்கி வருகின்றன.
இப்பயிற்சியில் கடல், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுதாரா்கள் சேரலாம். இத்திட்டத்தின் கீழ் பயற்சி பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், மீனவா் நலத் துறை இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, உதவி இயக்குநா் அலுவலகம், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை 630 561 என்ற முகவரிக்கு வரும் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு 04575-240848 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாள்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.