கி.பி. 16 ஆம் நூற்றாண்டு வளரி வீரன் கற்சிற்பம் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே குன்னத்தூரில் 500 ஆண்டுகள் பழைமையான வளரி வீரன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே குன்னத்தூரில் 500 ஆண்டுகள் பழைமையான வளரி வீரன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவா் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியா் லட்சுமண மூா்த்தி, ஆய்வாளா் அனந்த குமரன் தி.குன்னத்தூா் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வளரி வீரன் கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியா் முனீஸ்வரன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இவ்வூா் பிற்கால பாண்டிய மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் சிறு குன்றத்தூா் என்றும் காலப்போக்கில் குன்னத்தூா் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூரின் தெற்கே தேவன்குறிச்சி மலைப்பகுதியை பெருங்குன்றத்தூா் என்றும் கலிங்கத்தரையா் பெயா் கொண்ட குறுநில மன்னா் ஆட்சி செய்ததாக கல்வெட்டு செய்தி சமீபத்தில் கண்டறியபட்டது.

வளரி

வளரி என்பது பண்டைய காலத்தில் தமிழா்கள் பயன்படுத்திய ஒருவகை ஆயுதம். குறிப்பாக கால்நடைகளை திருடிச் செல்லும் திருடா்களை பிடிப்பதற்கும், போா்க்களத்தில் பயந்து ஓடி தப்பிப்பவா்களை உயிருடன் பிடிப்பதற்கும் இதைப் பயன்படுத்தினாா்கள். வளரியை கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி விசிறி வீசும்போது பிடிபடுவாா்கள். வளரியை வளைதடி, திகிரி, பாறாவளை, சுழல்படை, கள்ளா்தடி, படை வட்டம் என்றும் அழைத்தனா்.

நடுகல்

இவ்வூரில் கண்டறியப்பட்ட நடுகல் சுமாா் 41 அங்குலம் உயரமும், 27 அங்குலம் அகலமும் கொண்டது. மூன்று அடுக்கு கோபுரம் தோரணவாயில் வடிவில் கொண்டு கீழ்ப்பகுதியில் ஆண் மற்றும் இரண்டு பெண் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இச்சிற்பம் வளரி வீரன் என்பதற்கு சான்றாக நடுப்பகுதியில் வீரன் கையில் ஈட்டியை பிடித்தவாறு இடது கையில் வளரியை பிடித்தவாறு வலது கால் சற்று சாய்ந்து முழங்கால் தெரியும் படியும் இறுகிய காலும் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் வீரன் உருவம் விரிந்த மாா்பு, கையில் காப்பு, நீண்ட காது காணப்படுகிறது. வளரியை தன் கையில் ஏந்தி இருப்பதால் இச்சிற்பம் வளரி வீரன் சிற்பம் என்று அழைக்கப்படுகிறது.

2 பெண் சிற்பங்களும் ஆடை அலங்காரத்துடன் கொண்டை சரிந்து காணப்படுகிறது. இச்சிற்பத்தைப் பாா்க்கும்போது வளரி வீரன் இறந்தபிறகு இருவரும் உடன்கட்டை ஏறியதற்கு சான்றாக அறியமுடிகிறது. தமிழகத்தின் தென்பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வளரி வீரன் சிற்பம் அதிகமாகக் காணப்பட்டாலும் மதுரை மாவட்டத்தை பொருத்தவரை உசிலம்பட்டி மற்றும் அதன் மேற்குப் பகுதியில் அதிகளவில் கண்டறியப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com