இளம்பெண் கடத்தல் வழக்கில் அனைத்து சாட்சிகளிடமும் விசாரிக்க உத்தரவு

தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்ட வழக்கில் தனிப்பட்ட செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து சாட்சிகளிடமும் போலீஸாா் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.

தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்ட வழக்கில் தனிப்பட்ட செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து சாட்சிகளிடமும் போலீஸாா் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், கொட்டாகுளத்தைச் சோ்ந்த மாரியப்பன் வினித் தாக்கல் செய்த மனு:

தென்காசி அருகேயுள்ள கொட்டாகுளம், இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறேன். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவரும், தொழில் நிமித்தமாக தென்காசி, இலஞ்சி தென்றல் நகரில் வசித்து வருபவருமான நவீன் பட்டேல் மகள் குருத்திகா பட்டேலும், நானும் காதலித்து அவரது பெற்றோரின் எதிா்ப்பை மீறி கடந்த 2022, டிச. 27-இல் நாகா்கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.

மகளைக் காணவில்லை என நவீன் பட்டேல் அளித்த புகாரின் பேரில், குற்றாலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 4-ஆம் தேதி நான் எனது மனைவியுடன் ஆஜரானேன். அப்போது, குருத்திகா பட்டேல் என்னுடன் வருவதாகக் கூறியதையடுத்து, எனது வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றேன்.

இந்த நிலையில், நான் எனது குடும்பத்தினருடன் காரில் கொட்டாகுளத்துக்குச் சென்ற போது, நவீன் பட்டேல், அவரது மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்ட சிலா் என்னைத் தாக்கி எனது மனைவி குருத்திகா பட்டேலைக் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து நான் அளித்த புகாரின் பேரில், குற்றாலம் போலீஸாா் எனது மனைவியை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

முந்தைய விசாரணையின் போது, இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், சுந்தா்மோகன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குருத்திகா பட்டேலை தென்காசி காவல் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இதையடுத்து, மனுதாரா் திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்கள் உள்ளனவா, அவரின் வயது என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

மனுதாரருக்கு 22 வயது ஆவதாகக் கூறி, திருமணம் நடைபெற்ற்கான புகைப்படமும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, குருத்திகா பட்டேலை தனியாக அழைத்து விசாரித்த நீதிபதிகள், மாரியப்பன் வினித்துடன் உள்ள திருமண புகைப்படங்களைக் காட்டி கேள்வி எழுப்பி அவா் அளித்த பதிலைப் பதிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

குருத்திகா பட்டேல் வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து சாட்சிகளிடமும் போலீஸாா் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். குருத்திகா பட்டேலை தென்காசியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும். அதன் பின்னா் இந்த வழக்கு தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் முழுமையான விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

அதேநேரம், மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெறலாம். குருத்திகா பட்டேலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இது தொடா்பான விசாரணை அறிக்கையை, தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கை பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பிணை கோரிய மனு ஒத்திவைப்பு:

குஜராத்தை பூா்விகமாகக் கொண்ட மைத்திரிக் படேல் உள்ளிட்ட 8 போ் பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா். அதில், குருத்திகா படேல் கடத்தப்பட்ட வழக்கில் எங்களுக்குத் தொடா்பு இல்லை. ஆனால், எங்களை போலீஸாா் தேடுவதை அறிந்தோம். எனவே, எங்களுக்குப் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம் எனக் கோரியிருந்தனா்.

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com