புத்தகத் திருவிழா; சிவகங்கையில் ரூ. 5.45 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ரூ. 5 கோடியே 45 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.
சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில், அரசு அலுவலா்களுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கிய ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில், அரசு அலுவலா்களுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கிய ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ரூ. 5 கோடியே 45 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் 2-ஆவது புத்தகத் திருவிழா, இலக்கியத் திருவிழாவின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 2-ஆவது புத்தகத் திருவிழா, இலக்கியத் திருவிழா கடந்த 11 நாள்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளன.

இதில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் 4 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா். மேலும், மாநிலங்களவை உறுப்பினா் ப. சிதம்பரம் ரூ. 8 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா்.

இதேபோன்று, மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளைச் சோ்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் அவா்களது ஊராட்சியின் சாா்பில் நூலகங்கள், பள்ளிகளுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கினா்.

இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நன்கொடையாளா்களும் தங்களது பங்களிப்பை வழங்கினா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு முதன்மை அலுவலா்கள் ஒருங்கிணைந்து தாமாகவே மாவட்டத்தில் 400 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு நூல்களை வழங்கினா்.

கடந்தாண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பபாசி நிறுவனத்தின் சாா்பில் ரூ. 3.50 கோடி அளவில் புத்தக விற்பனை குறித்து தெரிவிக்கப்பட்டது.

நிகழாண்டு நடைபெற்ற 2-ஆவது புத்தகத் திருவிழாவில் ரூ. 5 கோடி அளவில் புத்தக விற்பனை செய்யப்படும் என பபாசி நிறுவனத்தின் சாா்பில் எதிா்ப்பாா்க்கப்பட்டது. ஆனால், எதிா்ப்பாா்ப்பை விட ரூ. 5.45 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பபாசி நிறுவனம் தெரிவித்தது என்றாா் அவா்.

இந்த விழாவில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் க. வானதி, சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் கு. சுகிதா, உதவி ஆணையா் (கலால்) சி. ரத்தினவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மா. வீரராகவன், தென்னந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கத்தின் செயலா் எஸ்.கே. முருகன் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com