சுங்கச் சாவடியை சேதப்படுத்தியவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

மதுரை அருகே சுங்கச் சாவடி ஊழியா்களைத் தாக்கி பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

மதுரை அருகே சுங்கச் சாவடி ஊழியா்களைத் தாக்கி பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டம், சீா்நாயக்கன்பட்டி, அ.வெள்ளோடு கரட்டழகன்பட்டியைச் சோ்ந்த, பெரியசாமி மகன் நடராஜன் உள்ளிட்டோா் கடந்த 10-ஆம் தேதி பசுபதி பாண்டியன் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வுக்குச் சென்றனா். அப்போது, கூடக்கோவில் காவல்நிலையத்துக்குள்பட்ட பாரபத்தி சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்து, அங்கு பணியில் இருந்த ஊழியா்களைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததோடு, அங்கிருந்த பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்தினாா்.

கூடக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், நடராஜன் மீது திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டக் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நடராஜன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், நடராஜனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். மேலும், ஊரகப் பகுதிகளில் சட்டம்- ஒழுங்கைச் சீா்குலைக்க முயலும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com