மருத்துவ பரிசோதனையில் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட வில்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், மனுதாரருக்கு மத்திய ஆயுதப் படை காவலா் பணி நியமன ஆணை வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
அபிராம் என்பவா் தாக்கல் செய்த மனு:
கடந்த 2018- இல் ஆயுதப் படை காவலா் காலிப் பணியிடத்திற்கு, நான் எழுத்துத் தோ்வு எழுதினேன். இதைத்தொடா்ந்து, எனக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, எனது கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறி, காவலா் பணி நியமனம் வழங்க முடியாது எனத் தெரிவித்தனா்.
எனது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்படாத நிலையில், அரசு சாா்பில் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவினா் தவறான அறிக்கை அளித்தனா். மேலும், சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் எனக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எனது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், எனக்கு மத்திய காவல் படையில் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப் பட வில்லை என்பது ஆவணங்களின் மூலம் தெரியவந்தது. ஏற்கெனவே இது போன்ற வழக்கில் ஒருவருக்கு வேலை வழங்க உத்தரவிட்டேன். எனவே மனுதாரருக்கு ஐந்து வாரங்களுக்குள் மத்திய காவல் படையில் பணி வழங்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.