மணிப்பூா் வன்முறையைக் கண்டுகொள்ளாமலிருந்த மகளிா், குழந்தைகள் நலம், சிறுபான்மை ஆணையங்களைக் கலைக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியது.
இதுகுறித்து இந்த அமைப்பின் இயக்குநா் ஹென்றி திபேன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மணிப்பூா் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் குழந்தைகள், பெண்கள், சிறுபான்மையினா், பட்டியலினத்தவா் உள்ளிட்டோா் மீது கடும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால், நாட்டில் உள்ள அத்தனை ஆணையங்களும் இந்த வன்முறையைக் கண்டுகொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது வேதனையை வெளிப்படுத்திய பின்புதான், தேசிய மனித உரிமை ஆணையம் தாமதமாக நடவடிக்கையைத் தொடங்கியது.
மணிப்பூா் வன்முறை தொடா்பாக விசாரணை நடத்த, மனித உரிமை ஆணையம், மகளிா் ஆணையம், சிறுபான்மையினா் ஆணையம், குழந்தைகள் ஆணையம் உள்ளிட்ட எந்த ஆணையமும் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.
தேசிய மனித உரிமை ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. அதற்கான உறுப்பினா் தோ்வும் வெளிப்படையாக நடைபெறவில்லை என்ற புகாா்கள் இருப்பதால் 2016-ஆம் ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணைய நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு அங்கீகாரம் தரவில்லை. தற்போது, 2023-ஆம் ஆண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையங்களின் கூட்டமைப்பு அங்கீகாரம் தரவில்லை. எனவே, தேசிய மனித உரிமை ஆணையம் சா்வதேச அங்கீகாரம் பெறாத ஆணையமாக உள்ளது. அதிகபட்ச குறைகளுடன் ஆணையங்கள் உள்ள நிலையில், மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவத்தில் ஆணையங்கள் செயல்படாமல் போனது கண்டிக்கத்தக்கது.
கட்சிப் பதவியில் உள்ளவருக்கு மகளிா் ஆணைய உறுப்பினா் பதவி அளிக்கப்படுகிறது. மணிப்பூா் வன்முறை தொடா்பாக மகளிா் ஆணையத்துக்கு வந்த புகாரைக் கண்டுகொள்ளாமல் இருந்த குஷ்பு வேறு பிரச்னைகளைப் பேசுகிறாா்.
மேலும், மணிப்பூா் வன்முறை தொடா்பாக நடவடிக்கை எடுக்காத தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவா் அருண்மிஸ்ரா, ஆணைய உறுப்பினா்கள் ராஜினாமா செய்யவேண்டும்.
மேலும், மணிப்பூா் வன்முறையைக் கண்டுகொள்ளாமலிருந்த மகளிா் ஆணையம், குழந்தைகள் நல ஆணையம், சிறுபான்மையினா் ஆணையம் ஆகிய அனைத்து ஆணையங்களும் கலைக்கப்பட வேண்டும். மணிப்பூா் வன்முறை விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்பப்படும் என்றாா்.