பராமரிப்பில்லாத தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லம்

விளாச்சேரியில் சிதிலமடைந்து காணப்படும் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் நினைவு இல்லத்தைச் சீரமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பராமரிப்பில்லாத தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லம்

மதுரை மாவட்டம், விளாச்சேரியில் சிதிலமடைந்து காணப்படும் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் நினைவு இல்லத்தைச் சீரமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ் மொழியைச் செம்மொழியாக்க முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர். தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக, சூரியநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார்.  தமிழ் மொழியின் வரலாறு, தமிழ் புலவர் சரித்திரம், மதிவாணன், ரூபாவதி, மான விஜயம், தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருது உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். சென்னை பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்ட போது, அதை மீண்டும் சேர்க்கப் போராடியவர் பரிதிமாற் கலைஞர். 
இவரது தமிழ் மொழிப் பற்றைப் போற்றும் வகையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி விளாச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து, அங்கு பரிதிமாற் கலைஞரின் வெண்கலச் சிலையை நிறுவி கடந்த 31.10.2007-ஆம் ஆண்டு அவரே நேரடியாக வந்து நினைவு இல்லத்தைத் திறந்துவைத்தார். மத்திய அரசும் பரிதிமாற் கலைஞரின் தமிழ்ச் சேவையைப் போற்றும் வகையில் தபால் தலை வெளியிட்டு கெüரவித்தது.
இந்த இல்லம் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவிகள் இந்த நினைவில்லத்துக்கு வந்து செல்கின்றனர். மேலும், தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும் மாணவர்களும் இங்கு வந்து பரிதிமாற் கலைஞரின் புத்தகங்களை தங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். 
இந்த இல்லம் தற்போது போதிய பராமரிப்பின்றி களையிழந்து காணப்படுகிறது. வீட்டின் முற்றத்தில் உள்ள ஓடுகள் சேதமடைந்து, மழைக் காலங்களில் தண்ணீர் வீட்டுக்குள் வருகிறது. மர அலமாரிகளில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தகங்கள் கரையான்களால் சேதமாகி வருகின்றன. மேலும், இந்த வீட்டின் கதவு, ஜன்னல், மின் மோட்டார் உள்ளிட்டவையும் பழுதடைந்து காணப்படுகின்றன. 
 தமிழ் ஆராய்ச்சிக் கூடமாக மாற்றக் கோரிக்கை: இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த நினைவில்லத்தில் பரிதிமாற் கலைஞர் இயற்றிய தமிழ் மொழியின் வரலாறு, தமிழ் புலவர் சரித்திரம், தமிழ் வியாசங்கள், மதிவாணன் உள்ளிட்ட சுமார் 10 நூல்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்கள் எழுதிய பல்வேறு நூல்கள்,  தமிழாக்கம் செய்யப்பட்ட பிற மொழி நூல்களை இங்கு வைத்து, இல்லத்தை தமிழ் ஆராய்ச்சிக் கூடமாக மாற்றியமைக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com