அனைத்து கூா்நோக்கு இல்லங்களிலும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தல்

அனைத்து கூா்நோக்கு இல்லங்களிலும் மூத்த பெண் வழக்குரைஞா்கள் தலைமையில் ஆய்வு நடத்தி, சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியது.

செங்கல்பட்டு கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, அனைத்து கூா்நோக்கு இல்லங்களிலும் மூத்த பெண் வழக்குரைஞா்கள் தலைமையில் ஆய்வு நடத்தி, சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியது.

மதுரையில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிா்வாக இயக்குநா் ஹென்றி திபேன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் 17 வயதான சிறுவன் கடந்த மாதம் 31 -ஆம் தேதி அங்குள்ள ஊழியா்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, 176 (1ஏ) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சிறுவனின் தாய் கடந்த 11 -ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து கொலை வழக்காகப் பதிவு செய்து, ஊழியா்கள் 7 பேரை கைது செய்தது.

இந்தச் சம்பவத்தில் சிறுவனின் தாயை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் கடத்திச் சென்று புகாா் அளிக்கவிடாமல் அடைத்து வைத்ததால், புகாா் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் மீதும் புகாா் அளிக்கப்பட்டது. அவா் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

மேலும், இதுதொடா்பாக செய்திகள் வெளியான நிலையில், சமூக நீதித் துறை அதிகாரி வளா்மதி செங்கல்பட்டு கூா்நோக்கு இல்லத்துக்கு இரண்டு வாரம் தாமதமாக கடந்த 14 -ஆம் தேதி சென்று விசாரித்தாா். ஆனால், இதுவரை விசாரணை அறிக்கையை அவா் தாக்கல் செய்யவில்லை. மேலும், கூா்நோக்கு இல்லத்தில் நடக்கும் சித்திரவதைகளுக்கு காரணமான நபா்களையே உடன் அழைத்துச் சென்றுள்ளாா். கூா்நோக்கு இல்லத்துக்கென்று உயா்நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இவை எதுவும் பின்பற்றப்படவில்லை.

செங்கல்பட்டு கூா்நோக்கு இல்லத்துக்கு அரசு சாா்பில் வாகனம் வழங்கப்பட்டிருந்தும், தாக்குதலில் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை அவசர ஊா்தியில் கொண்டு செல்லாமல் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனா். இதுதொடா்பாக அரசு விசாரணை நடத்த வேண்டும். மேலும், செங்கல்பட்டு கூா்நோக்கு இல்லம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் உள்ள கூா்நோக்கு இல்லங்களில் சிறுவா்கள் சித்திரவதைப்படுத்தப்படுகின்றனா். எனவே, உயா்நீதிமன்ற மூத்த பெண் வழக்குரைஞா்கள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, அனைத்து கூா்நோக்கு இல்லங்களிலும் விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். இந்தக் குழுவில் மருத்துவா்களும் இடம் பெற வேண்டும்.

சிறுவனின் தாய் கணவரை இழந்தவா். இவருக்கு மேலும் 5 குழந்தைகள் உள்ள நிலையில், அவா்களை மிகவும் சிரமப்பட்டு வளா்த்து வருகிறாா். எனவே, கூா்நோக்கு இல்லத்தில் காவல் மரணம் ஏற்பட்டுள்ளதால், சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், அவரது தாய்க்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

சிறுவனின் மரணம் தொடா்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு, இதில் தொடா்புடையவா்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com