தூய்மைப் பணி ஒப்பந்தம்: மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மட்டும் வழங்கக் கோருவது ஜனநாயகத்துக்கு எதிரானது

மதுரை: தூய்மைப் பணி, கழிவறை பராமரிப்புகளுக்கான ஒப்பந்தத்தை மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மட்டும் வழங்கக் கோருவது ஜனநாயகத்துக்கு எதிரானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களிலும் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் பலா் நிரந்தரமாக பணியமா்த்தப்படவில்லை. இந்தப் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்த நிலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுக் கழிவறைகள் பராமரிப்பு ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்படுகின்றனா். இதனால், இவா்கள் பொருளாதார ரீதியாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, மதுரை மாநகராட்சியில் தனியாருக்கு வழங்கப்பட்ட தூய்மை பணி ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும், தூய்மைப் பணி, கழிவறை பராமரிப்பு ஆகியவற்றுக்கான பணி ஒப்பந்தங்களை மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள்ஆா். சுரேஷ்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, தூய்மைப் பணி ஒப்பந்தத்தை மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது ஜனநாயகத்துக்கு விராதமானது என்றது.

அப்போது மனுதாரா் தரப்பில், மனுவில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com