மீனாட்சி அம்மன் செங்கோல் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை இல்லை -உயா்நீதிமன்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்கோப்புப்படம்

மதுரை மீனாட்சி அம்மன் செங்கோலை கணவரை இழந்தவருக்கு வழங்கக் கூடாது எனக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த தினகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:

சித்திரை திருவிழாவின் 8-ஆம் நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது, மீனாட்சியம்மனின் கைகளில் செங்கோல் ஒப்புவிக்கப்படும். இந்த செங்கோலை கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் பெற்றுக் கொள்வாா்.

ஆகம விதிகளின்படி, திருமணமாகாதவரோ, கணவா், மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக் கொள்ள இயலாது. அறங்காவலா் குழுத் தலைவராகப் பதவி வகிக்கும் ருக்மணி பழனிவேல்ராஜன் கணவரை இழந்தவா் என்பதால், ஆகம விதிகளைப் பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்கக் கூடாது. இதற்கு அனந்தகுல சதாசிவ பட்டா் தகுதியானவா் என்பதால், அவரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்தேன்.

இதை விசாரித்த தனி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவு ஏற்கத்தக்கதல்ல. ஆகம விதிகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் நிகழ்வுகளில் ஆகம விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என சீதலக்குறிப்பேடு சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன், இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு தெளிவாக உள்ளது. எனவே, அதில் மேற்கொண்டு வேறு உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

முந்தைய காலங்களில் என்ன நிகழ்ந்தது என்பது தெரியாது. நூல்களின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவுக்கு வர இயலாது. ஆகம விதிகள் என்பது என்ன? வேறு ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா? இதில் ஆகம விதிகளை மட்டும்தான் பின்பற்ற வேண்டுமா? இந்த முறை வழக்கத்தில் இருந்ததா என்பவை குறித்து ஒரே நாளில் முடிவுக்கு வர இயலாது. எனவே, நிகழாண்டு மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது.

நீதிபதிகள் ஆகம விதிகளுக்கான நிபுணா்கள் அல்லா் என்பதால், தற்போது எந்த முடிவையும் எடுக்க இயலாது. எனவே, ஆகம விதிகள் குறித்து முறையாக அறிக்கை ஆவணங்களை தாக்கல் செய்தால், அதை ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம்.

எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தற்போது தடை விதிக்க முடியாது. எனவே, இந்த முறை செங்கோல் வழங்கும் நிகழ்வை வழக்கம் போல நடத்த வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com