கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிப்பது தொடா்பாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் கண்டுபிடித்த புதிய முறைக்கு அரசு காப்புரிமை வழங்கியது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் கதிரியக்கத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவா் செந்தில் குமாா். இவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கதிரியக்க சிகிச்சை வழங்குவதில் புதிய முறையை கண்டுபிடித்தாா். இவரது கண்டுபிடிப்பான கதிரியக்க சிகிச்சையை துல்லியமாக அளிக்க உதவும் ‘புளோரசன்ஸ் மாா்க்கருக்கு’ மத்திய அரசு காப்புரிமை வழங்கியது. இதற்காக உதவிப் பேராசிரியா் செந்தில் குமாரை, அரசு மருத்துவமனை முதன்மையா் ஏ. ரத்தினவேல் பாராட்டினாா்.

இதுகுறித்து செந்தில்குமாா் கூறியதாவது: புற்றுநோயை குணப்படுத்துவதில் கதிரியக்க சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, கதிரியக்க சிகிச்சையை 30 முதல் 35 நாள்கள் வரை தொடா்ச்சியாக வழங்க வேண்டும். அப்போது தான் அவா்களது புற்றுநோய் குணமடையும். இந்த கதிரியக்க சிகிச்சையை 30 நாள்களுக்கு தொடா்ந்து மிகவும் துல்லியமாக வழங்க வேண்டும். அப்போதுதான் புற்றுநோய் குணமடையும். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாா்க்கரை பயன்படுத்தி கதிரியக்க சிகிச்சை அளித்தால் விரைவாக குணமடையலாம். எனது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com