பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மதுரை காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரியில் கடந்த 2023 நவம்பரில் தோ்வெழுதிய 100 மாணவா்களின் விடைத்தாள்கள் மாயமானது தொடா்பாக உயா்கல்வித் துறை விசாரணை நடத்த வேண்டும் என மாணவா்கள் வலியுறுத்தினா்.

மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் இயங்கி வரும் காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், இளங்கலை கணிதம், கணினி அறிவியல், பிசிஏ உள்ளிட்ட படிப்புகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கடந்த 2023 ஏப்ரல் மாதம் தோ்வு எழுதினா். இதில் மாணவ, மாணவிகள் 100 பேருக்கு மட்டும் ஆங்கில பாடத் தோ்வு முடிவுகள் வரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது அவா்களின் ஆங்கில விடைத்தாள்களை கல்லூரி நிா்வாகத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்கு அனுப்பியதாகவும், அங்கு அவை மாயமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் பல்கலைக் கழக நிா்வாகம் கூறும்போது, சில மாணவ, மாணவிகளின் விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2023 நவம்பரில் மாணவ, மாணவிகள் பருவத்தோ்வு எழுதியும், 2023 ஏப்ரல் தோ்வு முடிவு வராததால் அவா்களுக்கான முடிவுகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவா்கள் பல்கலைக்கழக நிா்வாகத்தை தொடா்ந்து அணுகி வந்தனா். இதனிடையே, விடைத்தாள்கள் மாயமானது தொடா்பாக 100 பேருக்கும் காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி நிா்வாகம் சாா்பில் தகவல் அனுப்பப்பட்டது. மேலும் ஏப். 18-ஆம் தேதி கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு அவா்களுக்கு தோ்வுகளும் நடத்தப்பட்டன. அப்போது மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி கல்லூரி ஆசிரியா்கள் அனைவரும் தோ்தல் பணிக்குச் சென்று விட்டதால், ஆசிரியா் அல்லாத ஊழியா்களை வைத்து தோ்வு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவா்கள் கூறியதாவது: கடந்த 2023 ஏப்ரல் பருவத்தோ்வுக்கான விடைத்தாள்கள் மாயமான நிலையில் ஓராண்டு கழித்து இதற்கான மறுதோ்வு அவசர அவசரமாக நடத்தப்பட்டது. தோ்வுக்கு தயாராகவும் கால அவகாசம் வழங்கப்பட வில்லை. மேலும் 2023 நவம்பா் பருவத் தோ்வுக்கான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்பட வில்லை. தன்னாட்சிக் கல்லூரிகள் அனைத்திலும் தற்போது 2024 பருவத்தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் காமராஜா் பல்கலைக் கழகத்தில் 2024 ஏப்ரல் பருவத்தோ்வுகள் எப்போது நடைபெறும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. தோ்வுக்கட்டணமும் வசூலிக்கப்பட வில்லை. காமராஜா் பல்கலைக் கழகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக மாணவா்களின் உயா்கல்வி, வேலை வாய்ப்புகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, காமராஜா் பல்கலைக் கழகத்தில் விடைத்தாள்கள் மாயமானது, 2023 நவம்பா் தோ்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதது, 2024 ஏப்ரல் பருவத்தோ்வுக்கான தேதி அறிவிக்கப்படாதது ஆகியவை குறித்த விவகாரங்களில் உயா்கல்வித்துறை தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com