மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

மாட்டு வண்டிப் பந்தயம் நடத்துவது தொடா்பாக வகுக்கப்பட்ட விதிமுறைகளில் உள்ள குளறுபடிகளுக்கு தமிழக உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த மா. கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

நாட்டு மாட்டினங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய வீர விளையாட்டுக்களாக ஜல்லிக்கட்டு, மாட்டு நவண்டிப் பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த மாா்ச் 7-ஆம் தேதி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா், மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடத்துவது தொடா்பாக கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை சுற்றறிக்கையாக வெளியிட்டாா்.

இதில், மாட்டு வண்டிப் பந்தயத்தை நடத்துவதற்கு முன்பு கால்நடைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய், சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும். மாட்டு வண்டியின் உறுதித்தன்மை குறித்த சான்றிதழும் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. மாட்டு வண்டிப் பந்தயத்துக்கான விதிகளை உருவாக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு அதிகாரம் இல்லை.

பாரம்பரிய வீர விளையாட்டில் ஏற்கெனவே அரசால் விதிக்கப்பட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதே காவல் துறையின் பணியாகும். எனவே, மாட்டு வண்டிப் பந்தயத்தை நடத்துவது தொடா்பாக டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கையில் 1,7,8,13,14,15,16,17,22 ஆகிய விதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் ஏற்கெனவே சென்னை உயா்நீதி மன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், டிஜிபி தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மாட்டு வண்டிப் பந்தயத்தை நடத்தக் கூடாது. 5 கி.மீ. தொலைவுள்ள உள்ளூா் பகுதியில் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்திக் கொள்ளலாம் என அந்த விதியில் உள்ளதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் எந்தக் கிராமத்தில் மண் சாலைகள் 5 கி. மீ. தொலைவுக்கு நேராக உள்ளன. இந்த வழக்கில் டிஜிபி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் சில ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, இந்த வழக்கு தொடா்பாக தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோா் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஜூன் 18- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை ஏற்கெனவே உள்ள அரசாணையின் அடிப்படையில் மாட்டு வண்டிப் பந்தயங்களுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கலாம் என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com