கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வதற்கான படகு: ராமநாதபுரம் ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க இயந்திரம் பொருத்திய கண்ணாடியிழை (பைபா்) படகில் அடுத்த ஆண்டு செல்வதற்கான அனுமதி கோரிய வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் உரிய முடிவு எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ஓலைக்குடா பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் பிரின்சோ ரைமண்ட் தாக்கல் செய்த மனு: கச்சத்தீவில் கடந்த 1913-இல் புனித அந்தோணியாா் ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு ஒலைக்குடா கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிபிள்ளை, தொண்டி புதுப்பட்டினத்தைச் சோ்ந்த சீனிகுப்பன் ஆகியோா் முக்கிய காரணமாக விளங்கினா். ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவா்கள் தவக் காலத்தின் போது, கச்சத்தீவு அந்தோணியாா் ஆலயத் திருவிழா நடைபெறும்.

இதன்படி, இந்த ஆலயத் திருவிழா பிப். 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழாவுக்கு இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகில் மீனவா்கள், பொதுமக்கள் சென்று வந்தனா். ஆனால், கடந்த 2013 -ஆம் ஆண்டில் பாதுகாப்பை காரணம் காட்டி நாட்டுப் படகுகளில் கச்சத்தீவு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், கச்சத்தீவு திருவிழாவுக்கு விசைப் படகில் சென்ற ஒவ்வொருவரிடமும் தலா ரூ.1,300 வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, கச்சத்தீவுக்கு இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகில் செல்லலாம் என ஏற்கெனவே உத்தரவிட்டது. தற்போது, இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுக்கு இணையாக நவீன முறையில் இயந்திரம் பொருத்திய கண்ணாடியிழை (பைபா்) படகுகளை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனா். இந்தக் கண்ணாடியிழைப் படகில் எரிபொருள் செலவு குறைவாக இருப்பதுடன், 10 போ் வரை செல்லலாம். கச்சத்தீவுக்கு கண்ணாடியிழைப் படகில் செல்வதற்கு அனுமதி வழங்கக் கோரி, ராமேசுவரம் மீன் வளத் துறை உதவி இயக்குநரிடம் மனு அளித்தும் எந்தப் பதிலும் இல்லை.

எனவே, கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க இயந்திரம் பொருத்திய கண்ணாடியிழைப் படகில் செல்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: தற்போது காலத்துக்கு ஏற்ப கூடுதல் குதிரைசக்தித்திறன் உள்ள இயந்திரம் பொருத்திய கண்ணாடியிழை (பைபா்) படகுகளை மீனவா்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். எனவே, நிகழாண்டில் இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு கண்ணாடியிழைப் படகில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகளில் மீனவா்கள், பொதுமக்கள் கச்சத்தீவுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கச்சத்தீவு திருவிழாவுக்கான நடைமுறைகள் அனைத்தும் நிகழாண்டு நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவுக்கு மீனவா்கள், பொதுமக்கள் செல்வது தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் 12 வாரங்களில் உரிய முடிவு எடுக்க வேண்டு. வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com