மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் முன்னேற்பாடுகள் கூட்டத்தில் பேசிய தோ்தல் பொதுப் பாா்வையாளா் கௌரங்பாய் மக்வானா.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் முன்னேற்பாடுகள் கூட்டத்தில் பேசிய தோ்தல் பொதுப் பாா்வையாளா் கௌரங்பாய் மக்வானா.

தோ்தல் பணி அலுவலா்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் -தோ்தல் பாா்வையாளா்

தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, நடுநிலையான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என தேனி மக்களவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் கௌரங்பாய் மக்வானா தெரிவித்தாா். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகள், தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டவையாக உள்ளன.

இருப்பினும், இந்த 2 தொகுதிகளுக்குமான தோ்தல் வாக்குப் பதிவுக்கான பணிகள் மதுரை மாவட்ட நிா்வாகம் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, சோழவந்தான், உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதிகளின் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா தலைமை வகித்து, உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்கினாா்.

தேனி மக்களவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் கௌரங்பாய் மக்வானா பேசியதாவது: தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, நடுநிலையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்குச் சாவடி மையங்களை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா். மதுரை தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் தா்ம்வீா் தண்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com