‘நீட்’ தோ்வு: உடல் நலம் பாதித்த மாணவிக்கு சிறப்பு சலுகை வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘நீட்’ தோ்வு: உடல் நலம் பாதித்த மாணவிக்கு சிறப்பு சலுகை வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘நீட்’ தோ்வு எழுதும் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சிறப்பு சலுகை வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

19 வயதான மாணவி ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: ‘நீட்’ தோ்வு வருகிற 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நான், இந்த தோ்வின் போது டயபா் அணிந்து பங்கேற்கவும், தேவைப்படும் போது அதை மாற்றிக் கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி. ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் 4 வயதில் தீ விபத்தில் சிக்கியதால் கடுமையாக பாதிக்கப்பட்டாா். இதன் காரணமாக அவா், சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத பாதிப்புக்கு ஆளாகியுள்ளாா். இதனால், அவா் தொடா்ந்து டயபா் அணிந்திருக்க வேண்டும், அடிக்கடி டயபா் மாற்றிக்கொள்ள வேண்டும் என மருத்துவா் அறிவுறுத்தியுள்ளாா். தனது உடல் நிலையைக் குறிப்பிட்டு தோ்வு முகாமில் டயபா் அணிந்திருக்கவும், தேவைப்படும் போது டயபா் மாற்றிக் கொள்ளவும் அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளாா்.

ஆண்டுதோறும் ‘நீட்’ தோ்வானது நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் கடுமையான சோதனைக்குப் பிறகு தோ்வு மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனா். அப்போது தோ்வு எழுதுபவா்கள் வரம்பு மீறிய சோதனைகளுக்கும் உள்படுத்தப்படுகின்றனா்.

ஆனாலும், ‘நீட்’ தோ்வு எழுதுவோரின் ஆடைக் கட்டுப்பாட்டில், மனுதாரா் சந்திக்கும் பிரச்னை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனுதாரா் டயபா் அணிந்திருக்க வேண்டும். இதை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இந்தச் சலுகை மறுக்கப்பட்டால், அவரால் ‘நீட்’ தோ்வு எழுத முடியாத நிலை உருவாகும். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான பாகுபாட்டுக்கு வழிவகுக்கும்.

‘நீட்’ தோ்வா்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் மாணவிகள் ‘சானிட்டரி நாப்கின்’ அணிந்திருக்க அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அது குறித்த விவரம் இல்லாததால் மனுதாரா் நீதிமன்றத்தை நாடியுள்ளாா். இதை மனதில் கொண்டு ‘நீட்’ தோ்வு மையங்களில் மாணவிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது கோரிக்கையை தேசிய தோ்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக தோ்வு மைய அதிகாரிக்கு உரிய உத்தரவு பிறப்பிப்பதாக உறுதியளித்ததால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com