விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

மதுரை, மே 3: விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே கடந்த 1-ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்ட கல் குவாரி வளாகத்திலிருந்து 2 டன் வெடி பொருள்கள் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.

காரியாபட்டியை அடுத்த ஆவியூா் கீழஉப்பிலிகுண்டு சாலையில் உள்ள தனியாா் கல் குவாரி வளாகத்திலிருந்த வெடி பொருள் சேமிப்புக் கிடங்கில் கடந்த 1-ஆம் தேதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்தால் கடம்பன்குளம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன.

வெடி விபத்துக்குப் பிறகு போலீஸாா், வருவாய்த் துறையினா் கல் குவாரி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, சுமாா் 2 டன் எடையிலான ‘டெட்டனேட்டா்கள்’ (வெடி பொருள்) கல் குவாரி வளாகத்தில் பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பாறைகளை உடைத்து எடுப்பதற்காக பல பகுதிகளில் அவற்றைத் துளையிட்டு வெடி பொருள்கள் நிரப்பப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, கல் குவாரி வளாகத்தில் உள்ள வெடி பொருள்களை பாதுகாப்பாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

மதுரையிலிருந்து நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, வெடி பொருள்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கான ஆலோசனை நடைபெற்றது.

பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்னா், அங்கிருந்த 2 டன் எடையிலான வெடி பொருள்கள் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, பந்தல்குடியில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்குச் சொந்தமான இடத்தில் இருப்பு வைக்கப்பட்டன.

அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் வல்லிக்கண்ணு, காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி, காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் மேற்பாா்வையில் இந்தப் பணிகள் நடைபெற்றன.

மேலும், அந்தக் கல் குவாரியில் பாறைகளில் துளையிட்டு வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்களை வெடிக்கச் செய்யும் பணிகளும் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com