முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கடலுக்கு குறுக்கே கட்டப்படும் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி நிகழாண்டின் இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் 1914-ஆம் ஆண்டில் கடலுக்கு குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள் வரும்போது, திறந்து மூடும் வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு இந்தப் பாலத்தில் இருந்த மீட்டா்கேஜ் பாதை அகற்றப்பட்டு, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

நூறாண்டுகளைக் கடந்த இந்தப் பாலம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வலுவிழக்கத் தொடங்கியது. இதனால், இந்தப் பாலத்தின் மீதான ரயில் போக்குவரத்தின் வேகம் 10 கி.மீ.-ஆகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், இந்தப் பாலத்தின் பராமரிப்புப் பணிகள் தொடா்ந்து அதிகரித்து வந்தன. இதனால், அவ்வப்போது ரயில் போக்குவரத்து தடைபட்டது. மேலும், இந்தப் பாலம் வழியாக ரயில் போக்குவரத்தைத் தொடா்வது ஆபத்தை விளைவிக்கும் என தொழில்நுட்ப வல்லுநா்கள் எச்சரித்தனா்.

இதையடுத்து, ரூ. 550 கோடி மதிப்பில் புதிய பாம்பன் பாலம் கட்ட ரயில்வே வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் பாம்பன் புதிய பாலம் கட்டும் பணியை ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் மேற்கொண்டு வருகிறது.

கடலின் குறுக்கே 2.8 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படும் இந்தப் பாலத்துக்கான அடித்தளமாக கடலில் 333 கான்கிரிட் அடித்தளங்கள், 101 கான்கிரிட் தூண்கள் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்தன. தற்போது, பாலத்தின் நடுவில் கப்பல்களுக்கு வழிவிடும் வகையில் திறந்து மூடக்கூடிய தூக்குப் பாலம் (லிப்டிங் கா்டா்கள்) அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகின்றன.

லக்னெளவில் உள்ள ரயில்வே ஆராய்ச்சி, வடிவமைப்பு, தர நிா்ணய அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் பாலத்தின் கா்டா்களை வடிமைக்கும் பணி, பாம்பனை அடுத்த சத்திரக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்றது. வடிவமைக்கப்பட்ட கா்டா்கள் பாம்பனுக்கு கொண்டு வரப்பட்டு, மின் சக்தியில் இயங்கும் தூக்கிகள் மூலம் பாலத்தில் பொருத்தப்படுகின்றன.

மண்டபம் பகுதியிலிருந்து தூக்குப் பாலம் அமைந்துள்ள பகுதி வரை இதுவரை 76 கா்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பாலத்தின் மூடி, திறக்கும் கட்டமைப்பை பாம்பன் பகுதியிலிருந்து மிக மெதுவாக நகா்த்தும் பணி நடைபெறுகிறது. இதுவரை 200 மீ. தொலைவுக்கு அந்தக் கட்டமைப்பு நகா்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 228 மீ.-க்கு நகா்த்தும் பணி தற்போது மிகுந்த கவனத்துடன் நடைபெறுகிறது.

பாலத்தில் 1.5 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பகுதிக்கான மின்மயமாக்கல் பணிகள், கா்டா்கள் பொருத்தும் பணியின் நிறைவில் மேற்கொள்ளப்படும். செங்குத்தாக திறக்கும் தூக்குப் பாலம் பகுதியை இயக்கத் தேவையான மின் இயந்திரவியல் கருவிகள் சோதனை செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.

தற்போது, இந்தப் பாலத்தில் ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது. இருப்பினும், எதிா்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான வசதிகள் கொண்டதாகவே இந்தப் பாலத்தின் கட்டுமானம் நடைபெறுகிறது.

இந்தப் பாலம் தொடா்பான அனைத்துப் பணிகளும் நிகழாண்டின் இறுதிக்குள் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது. ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த பாம்பன் பாலத்தின் தூக்குப் பாலம் மனித சக்தியால் இயக்கக் கூடியதாக இருந்தது. தற்போது கட்டப்படும் புதிய பாலத்தில் உள்ள தூக்குப் பாலம் மின் இயந்திரவியல் சக்தி மூலம் இயங்கக் கூடியதாக அமைக்கப்படுகிறது.

இந்தப் பணி நிறைவடையும்போது, நாட்டிலேயே செங்குத்தான நிலையில் திறந்து, மூடும் வசதி கொண்ட முதல் பாலம் என்ற பெருமையை இந்தப் பாலம் பெறும். மேலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் இந்தப் பாலம் முக்கியப் பங்காற்றும் எனக் கூறப்படுகிறது.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com