மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 13-இல் தொடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 13-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 13-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறும். இதையொட்டி, 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை (1 முதல் 9-ஆம் திருநாள் வரை) சுவாமி, அம்மன், பஞ்ச மூா்த்திகளுடன் மாலை 6 மணியளவில் திருக்கோயிலில் இருந்து புது மண்டபம் சென்று அங்கு பத்தியுலாத்துதல், தீபாராதனை வகையறா முடிந்ததும், அங்கிருந்து நான்கு சித்திரை வீதிகளில் உலா சென்று திருக்கோயில் சேத்தியாவா்.

மேலும், வருகிற 22-ஆம் தேதி 10-ஆம் திருநாள் காலையில் புதுமண்டபத்தில் எழுந்தருளி பகலில் தங்கி, வழக்கம்போல மாலையில் அபிஷேக தீபாராதனை முடிந்து, சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சோ்வா்.

மேலும், 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை அருளாளா் திருஞானசம்பந்தா் திருவிழா நடைபெறும்.

25-ஆம் தேதி காலையில் திருஞானசம்பந்தா் திருநட்சத்திரத்தன்று தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, 63 நாயன்மாா்களின் 4 ஆவணி மூல வீதி புறப்பாடு, அன்று இரவு 8 மணியளவில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி, 4 ஆவணி மூல வீதிகளில் உலா நடைபெறும்.

வசந்த உற்சவம் நடைபெறுவதையொட்டி வருகிற 13-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை திருக்கோயில் சாா்பாக உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com