பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

மதுரை: தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் கல்லூரியில் பணிபுரிந்த உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி, மாணவிகளை தவறாக வழி நடத்திய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்தனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் நிா்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்த நிலையில், நிா்மலாதேவி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு புதன்கிழமை தனி நீதிபதி முன் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com