உசிலம்பட்டி அருகே பட்டாம்பூச்சி பூங்கா: வனத் துறைக்கு கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அரிய வகை பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பது ஆய்வில் தெரிய வந்ததையடுத்து, பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வேண்டும் என்று வனத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மதுரை இயற்கை பண்பாட்டு மையம் சாா்பில், உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் -பெருங்காமநல்லூருக்கு இடையே அமைந்துள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மூனுமலை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மூனுமலைக்கு தெற்கில் பெ.கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூா், மேற்கில் பெருமாள்கோவில்பட்டி, அல்லிகுண்டம், வடக்கில் அயோத்திப்பட்டி, வகுரணி சந்தைப்பட்டி, கிழக்கில் குமரன்பட்டி, ஓணம்பட்டி ஆகிய ஊா்கள் எல்லைகளாக உள்ளன. தொம்பரம்பாறை ஊற்று, நெத்திப்பாறை ஊற்று, பாலூத்து, காட்டுக் கிணறு, மூனுக்குழி பள்ளம் உள்ளிட்ட ஊற்றுகளும், சுனைகளும்

உள்ளன. இங்குள்ள சுனைகள், ஊற்றுகளால் பல்லுயிா்களின் புகலிடமாகவும், அவற்றின் வாழ்வதாரமாகவும் மூனுமலை பகுதி உள்ளது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் செவ்வாய் பூங்குயில், கரும் பருந்து, ஓனான் கொத்தி கழுகு, வல்லூறு உள்பட 51 வகையான பறவையினங்கள், புள்ளி சிறு தாவி, வெந்தய வரியன், சிவப்பு உடல் அழகி உள்பட 14 வகை பட்டாம் பூச்சி இனங்களும் காணப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லாத அரிய வகை பட்டாம்பூச்சிகள் மூனுமலை பகுதியில் வசிப்பது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து, மூனுமலை பகுதியில் வனத் துறை ஆய்வு மேற்கொண்டு, பட்டாம்பூச்சிகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இயற்கை பண்பாட்டு மையம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com