காவல் ஆய்வாளருக்கு மிரட்டல்: புதிய தமிழகம் கட்சி நிர்வாகி மீது வழக்குப் பதிவு
பரமக்குடியில் காவல் ஆய்வாளரை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்த புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடியில் காவல் ஆய்வாளரை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்த புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் திங்கள்கிழமை கூறியது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு கடந்த 8.9.2015 ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் கிராமத்தில் ஆண்டு தோறும் அக்கிராமத்தினரால் நடத்தப்படும் ஐவர் விழா நிகழ்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அனைவரையும் கீழத்தூவலை நோக்கி வருமாறு, ஜாதி சமுதாய உணர்வை தூண்டும் வகையிலும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில பொதுச்செயலரான பாண்டித்துரை என்பவர் செயல்பட்டுள்ளார்.
மேலும் கடந்த இரு நாள்களாக கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் கீழத்தூவல் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் 144 தடை உத்தரவை மீறும் வகையில் பேசியும், மக்களை தூண்டியதாகவும் தெரிய வருகிறது. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் இச்செயலில் ஈடுபட்டமைக்காக பாண்டித்துரை மீது கீழத்தூவல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியில் இம்மாதம் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்காக பரமக்குடி நகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனுமதிக்கப்படாத இடத்தில் பிளக்ஸ் போர்டு வைத்ததால் அதை போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை அகற்றியுள்ளார். இதை அக்கட்சியின் மாவட்ட செயலரான கதிரேசனும் அவரது கட்சியை சேர்ந்தவர்களும் இன்ஸ்பெக்டரை மிரட்டி அவரை பணி செய்ய விடாமல் தடுத்திருக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலர் கதிரேசன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தனது கட்சியினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்குமாறு புதிய தமிழகம் கட்சியின் மாவட்டத் தலைவரான பால்ராஜ் அனுமதி கேட்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட நேரத்துடன் கூடிய தபாலை அவர் வாங்க மறுத்து விட்டதால் மற்றொரு தலைவரான பாபு என்ற பகவத்சிங்கிடம் வழங்கிய போதும் அவரும் அதை வாங்க மறுத்து விட்டார்.
எனவே அந்த நோட்டீஸை அவரது இல்லத்தில் காவல்துறையினர் ஒட்டி வந்தனர். ஆனால், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட்டு காலதாமதமாக வந்து பிறருக்கும் இடையூறாக நடந்து கொண்டார். இதற்கு உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் புதிய தமிழகம் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

