திருவாடானை வட்டத்தில்  500 திருவாடானை வட்டத்தில் பாசனத்துக்கு பயனில்லை!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள கண்மாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும் மடைகள் பராமரிப்பு இல்லாததாலும் மழை நீர் வீணாய் கடலில் கலந்து வருகிறது.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள கண்மாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும் மடைகள் பராமரிப்பு இல்லாததாலும் மழை நீர் வீணாய் கடலில் கலந்து வருகிறது.
 திருவாடானை வட்டத்தில் பொதுப்பணித்துறை மேற்பார்வையில் சுமார் 300 கண்மாய்கள்,  ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையில் சுமார் 200 கண்மாய்கள், ஜமீன் கண்மாய்கள் சுமார் 50 என மொத்தம் 500-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவை அனைத்தும் சங்கிலி தொடர்போல் ஒன்றன்பின் ஒன்றாக நீர் நிரம்பும் வகையில் அமைந்துள்ளன. இந்த கண்மாய்கள் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் முளைத்தும், மண் மேடாகவும் உள்ளன. இதனால் இவற்றின் கொள்ளளவு வெகுவாக குறைந்துவிட்டன.
  தமிழக அரசின் உத்தரவின்பேரில்  கண்மாய்களை தூர்வாருவதற்காக 3 அடி ஆழத்திற்கு மண் அள்ளிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதனை பயன்படுத்தி உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சிலர் அதிகாரிகள் உதவியுடன் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் விதிமுறையை மீறி அதிக ஆழத்திற்கு மண்ணை எடுத்துள்ளனர். இதனால் கண்மாய்களில் பெருகும் தண்ணீர் மடை ஏறி செல்ல முடிவதில்லை. எனவே, கண்மாய்களில் பெருகும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.   மேலும், இங்குள்ள கண்மாய்களில் 3அல்லது 5 மடைகள் வரை உள்ளன. அவைகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டபட்டவை.  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் அந்த மடைகள் எந்தவித பாரமரிப்பும் இல்லாமல் உள்ளன. எனவே, கண்மாய்களில் பெருகும் மழை தண்ணீர்,  மடைகள் சேதடைந்துள்ளதால் சேமித்து வைக்க முடியாமல் வெளியேறி விடுகின்றன.
 இது குறித்து திருவாடானை விவசாய சங்க தாலுகா துணை தலைவர் நாகநாதன் கூறியது:  இந்த வட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ளது. இப்பகுதியில் மன்னர் காலத்தில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கண்மாய்கள் அளவுக்கு தகுந்தாற்போல் மடைகள் அமைத்துள்ளனர். மடைகள் பல ஆண்டுகளாக பாரமிரிப்பு இன்றி சேதம் அடைந்துள்ளதால் மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் கடலில் கலக்கிறது. தற்போது மராமத்து என்ற பெயரில் மணல் கொள்ளைதான் நடந்துள்ளது. கண்மாய் மண்ணை வைத்து கரையை பலப்படுத்துவது அந்த காலத்தில் இருந்து வந்தது. தற்போது கரையும் பலம் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து குளங்களை தூர்வாருவதோடு,  மடைகள் மற்றும் கலுங்குகளை சீரமைக்க வேண்டும். அப்போதுதான் கண்மாய்கள் விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். இல்லையென்றால் கண்மாய்கள் இருந்தும் அவற்றால் விவசாயத்துக்கு பயன் இல்லாத நிலையே இருக்கும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com