ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் உள்ளிட்ட பகுதி நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதி பெற்ற சட்டவிரோதமாக இரவுபகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.
வைகை ஆற்றில் இருந்து பிரிந்து பார்த்திபனூர், அபிராமம், உடையநாதபுரம், வழியாக கமுதி, முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உள்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் கண்மாய்களுக்கு பாசனவசதி பெறும் வகையில் பரளையாறு செல்கிறது.
இதே போன்று வைகையாற்றில் இருந்து கிருதுமால் நதி பிரிந்து சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கட்டனூர், நரிக்குடி, வீரசோழன், புனவாசல், தரைக்குடி, பாப்பணம், சடையனேந்தல், நகரத்தார்குறிச்சி, ஏ.நெடுங்குளம், ஆணையூர், பேரையூர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களின் கண்மாய், ஊரணி, குளங்களை நிரப்புகிறது.
கடந்த மாதம் 24-ஆம் தேதி விவசாயப் பணிகளுக்கு தேவையான வண்டல் மண், சவுடு மண் ஆகியவற்றை நீர்நிலைகளில் அள்ளிக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி பெற்றவர்கள் சொந்த உபயோகத்துக்குத் தான் மணலை பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என விதிமுறைகள் உள்ளன.
ஆனால் தற்போது கமுதி வட்டத்தில் ஆற்றுப்படுகை அருகே உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் விவசாயப் பணிகளுக்கு வண்டல் மண், கரிசல் மண், சவுடு மண் அள்ள வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கண்மாய், ஊரணி, குளம், கிருதுமால் நதி, பரளையாறு உள்ளிட்ட பகுதிகளில் மணல் அள்ளி வருகின்றனர். மேலும் இந்த மண் தனியாருக்கு விற்கப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொது மக்கள், மகளிர் மன்றத்தினர் போலீஸார், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம். இது குறித்து விவசாயிகள் கூறும்போது: விவசாய பணிகளுக்கு என்று அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் அள்ளுவோர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து விவசாயிகளையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டும் என்றனர்.
கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது: ஒன்றிய அலுவலகம் மூலம் விவசாய பணிகளுக்கு மண் அள்ளிக் கொள்ள வாய்மொழி அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முறையான உத்தரவுகள் வழங்கப்படவில்லை.
வருவாய்த்துறை மட்டுமே முறையாக அனுமதி அளித்துள்ளனர். மணல் திருட்டு குறித்து வருவாய்த்துறை, போலீசாரிடம் புகார் தெரிவித்தால் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.
கமுதி மண்டல துணை வட்டாட்சியர் வரதராஜனிடம் கேட்ட போது, வருவாய்த்துறை சார்பில் விவசாயப் பணிகளுக்கு சவுடு மண் அள்ளிக் கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணல் அள்ளவோ பிறருக்கு விற்பனை செய்யவோ அனுமதி கிடையாது. அது போன்று தவறுகள் நடந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வண்டல் மண் அள்ள அனுமதி பெற்று நீர்நிலைகளைச் சூறையாடிவரும் சட்டவிரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து இப்பகுதி நீராதாரத்தை காப்பாற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.